ஒரு தமிழ் தேசிய சமூக ஆர்வலரான என் தந்தை பற்றிய நினைவுக் குறிப்புகள் and more...

உள்ளே ...


ஒரு தமிழ் தேசிய சமூக ஆர்வலரான என் தந்தை பற்றிய நினைவுக் குறிப்புகள்

"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" - திருக்குறள் 

சிறு வயதில் இந்தக் குறளைச் சொல்லி வளர்த்த எனது தந்தை இப்போது இயற்கை எய்தி விட்டார். சில தினங்களுக்கு முன்னர், கடுமையாக நோய் வாய்பட்டு யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில், தனது 79 ஆவது வயதில் காலமான எனது தந்தைக்கு, தமது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்ட அனைவருக்கும், முதற்கண் எனது நன்றிகள். 

சின்னர் தர்மலிங்கம் ஆகிய எனது தந்தை, யாழ்ப்பாணத்தில் எங்களது கிராமத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பிரபலமாக அறியப் பட்ட ஒரு சமூக ஆர்வலர். அவரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்வது, ஒரு மகனாக தந்தைக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட எனது அப்பா, கடைசி வரைக்கும் தனது கொள்கையில் இருந்து வழுவாது நின்றவர். அரசியலை வைத்து பிழைப்பு நடத்தாமல், மக்கள் சேவையை தலையாய கடமையாக கொண்டியங்கியவர். இறுதிக் காலங்களில், கடும் சுகயீனமுற்று வருடத்தில் பாதி நாட்கள் மருத்துவமனையில் காலம் கழிக்கும் வரையில், முதுமையிலும் தளராது தனது சமூகக் கடமைகளை நிறைவேற்றியவர். அவரைப் பற்றிய சுருக்கமான நினைவுக் குறிப்புகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வட இலங்கையில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சரசாலை எனும் கிராமத்தில் வாழ்ந்த, ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த "சின்னர்" எனும் ஏழை விவசாயிக்கு ஒன்பது பெண் பிள்ளைகளும், ஓர் ஆண் பிள்ளையும் பிறந்தன. அந்த விவசாயியின் ஒரேயொரு புதல்வன் தான், "தர்மலிங்கம்" என்ற பெயர் கொண்ட எனது அப்பா. பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில், 1935 ஆம் ஆண்டு பிறந்தார். வறுமை, அல்லது மரபு காரணமாக, எனது தாத்தா தனது மகனை மட்டும் படிக்க வைத்தார்.

 
அன்று யாழ் குடாநாட்டில் நிலவிய, கடுமையான நிலப்பிரபுத்துவ சுரண்டலில் இருந்து தப்புவதற்கான ஒரே வழி, கல்வி கற்பது தான். ஆனால், அது முழுவதும் ஆங்கில மயமாகி இருந்த படியால் ஒரு சிலரால் மட்டுமே நன்மை அடைய முடிந்தது. அந்த வகையில், படித்து உத்தியோகம் பார்க்கும் ஒருவர், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உதாரண புருஷராக அல்லது வழிகாட்டியாக கருதப் பட்டதில் வியப்பில்லை. பாட்டாளி வர்க்கத்தில் இருந்து படித்து, உழைப்பால் உயர்ந்த எனது தந்தை, ஒரு கீழ் மத்தியதர வர்க்கப் பிரதிநிதியாக மாறிய பின்னர், தமிழ் தேசிய அரசியலுக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இலங்கை சுதந்திரமடைந்த காலகட்டத்தில், அரசாங்கம் மட்டுமே, நாட்டில் பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பு தரும் பெரிய நிறுவனமாக இருந்தது. அதனால், சிங்கள - தமிழ் இன முரண்பாடும், ஒரு மத்திய தர வர்க்கப் பிரச்சினையாக ஆரம்பித்ததில் வியப்பில்லை. இன்றைக்கும் "படித்தவர்களின் பிரதேசம்" என்று அழைக்கப் படும் யாழ் குடாநாட்டை சேர்ந்த முன்னேறிய பிரிவினர், பிரிட்டன் வரை சென்று உயர் கல்வி கற்கும் வாய்ப்பை பெற்று, அரசு நிர்வாகத்திலும் உயர் பதவிகளை பெற்றுக் கொண்டனர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த, வறுமையான பின்னணி கொண்ட எனது அப்பா போன்றவர்கள், இடைத்தரக் கல்வியுடன் இடைத்தர அரசு ஊழியராக வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அவருக்கு அந்த வாய்ப்பு இராணுவத்தில் கிடைத்தது. முன்பு பிரிட்டிஷ் காலனிய இராணுவமாக இருந்து, சுதந்திரமடைந்த இலங்கையின் தேசிய இராணுவமாக மாறிய ஓர் அரசு நிறுவனத்தில், ஒரு சாதாரண எழுதுவினைஞர் (Clerk) பணியில் சேர்ந்து கொண்டார். பல வருட கால சேவை அனுபவம் காரணமாக, தலைமை லிகிதராக (Chief Clerk) பதவியுயர்வு பெற்றார். 

எனது தந்தை இராணுவத்தில் வேலை செய்து கொண்டே மருந்தாளராக (Pharmacist) தொழிற் கல்வி கற்று தேர்ச்சி பெற்றார். அதனால், கொழும்பு கொம்பனி வீதியில் உள்ள இராணுவ தலைமையகத்தின் மருத்துவப் பிரிவில் வேலை செய்யும் வாய்ப்புக் கிட்டியது.

அறுபதுகளில், ஆப்பிரிக்காவில் புதிதாக சுதந்திரமடைந்த கொங்கோவில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. அங்கு சமாதானத்தை நிலைநாட்ட அனுப்பப்பட்ட ஐ.நா. சமாதானப் படையில், இலங்கை இராணுவமும் இணைந்து கொண்டது. எனது தந்தையும், கொங்கோ நாட்டிற்கு அனுப்பப் பட்ட ஐ.நா. சமாதானப் படையில் ஒரு வீரராக தெரிவு செய்யப் பட்டார். அவர் கொங்கோவில் பணியாற்றிய காலத்தில், எடுத்த புகைப்படங்கள், சேகரித்த தகவல்கள், எனது சர்வதேச அரசியல் தொடர்பான ஆர்வத்தை தூண்டி விட்டன எனலாம்.  

எனது அப்பா இராணுவத்திற்குள் வேலை செய்த படியால், எவ்வாறு இனவாதம் சிங்களப் படையினர் மத்தியில் நிறுவன மயப் படுகின்றது என்பதை நேரடியாக கண்டுணர்ந்தார். ஒரு காலத்தில் உற்ற நண்பர்களாக இருந்த சிங்கள ஊழியர்கள், குறிப்பிட்ட கட்டத்தில் தமிழர்களுக்கு எதிரான துவேஷத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். எனது தந்தை மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் சிலர் இனவாதத்தை வெளிப்படுத்தினார்கள்.

அப்பாவுடன் கூட வேலை செய்த சிங்கள ஊழியர்கள், தாம் பேசுவதை இனவாதமாக கருதாமல், அதை நியாயப் படுத்தி வந்தனர். சிங்களப் பிரதேசத்தில், சிங்களவர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகளை தமிழர்கள் தட்டிப் பறிப்பதாக குற்றம் சாட்டினார்கள்.   ஆனால், "தமிழர்கள் எல்லோரும் படித்தவர்கள், உத்தியோகம் பார்ப்பவர்கள்" என்பது ஒரு கற்பனையான வாதம் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர்கள் இருக்கவில்லை. இது போன்ற ஒரு பக்கச் சார்பான அரசியல் கருத்துக்கள், பிற்காலத்தில் பல இலட்சம் மக்களை பலி கொண்ட போருக்கு இட்டுச் சென்றது.

இராணுவ தலைமை அலுவலகத்தில், சிங்கள ஊழியர்களுடன் அடிக்கடி நடக்கும் அரசியல் வாக்குவாதங்கள், எனது அப்பாவையும் தமிழ் தேசியவாத அரசியலுக்குள் இழுத்துச் சென்றதில் வியப்பில்லை. இலங்கையின் புத்திஜீவிகள், மத்திய தர வர்க்கத்தினர், "சிங்களவர், தமிழர்" என்று இரு துருவங்களாக பிரிந்து சென்று, அவரவர் தமக்குரிய அரசியலை அமைத்துக் கொண்டனர். அந்தப் பிளவு இன்று வரை தொடர்கின்றது. 

தமிழர்களுக்கு தனிநாடு வேண்டுமென்ற அரசியல் கோரிக்கையை முன்வைத்த தமிழரசுக் கட்சித் தலைவர்கள் கொழும்பில் மட்டுமே பெருமளவு செயற்பட்டு வந்தனர். தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் இணைந்து, தமிழர் விடுதலைக் கூட்டணியாக வட-கிழக்கு தமிழர்களின் ஏகபோக பிரதிநிதித்துவம் பெற்ற பின்னரும், கொழும்பை மையமாகக் கொண்ட அரசியல் பெருமளவு மாறவில்லை. அதனால், அந்தக் காலத்தில் "கொழும்புத் தமிழர்களாக" வாழ்ந்து கொண்டிருந்த எங்கள் குடும்பமும், மிக இலகுவாக தமிழ் தேசிய அரசியலுக்குள் அமிழ்ந்ததில் வியப்பில்லை.

தமிழ் தேசிய அரசியல் பற்றிய கலந்துரையாடல்கள் பல எங்களது வீட்டிலேயே இடம்பெற்றுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுப்பிட்டித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இராசலிங்கம் அப்பாவின் நெருங்கிய நண்பர். அவர் அடிக்கடி எமது வீட்டிற்கு வந்து போயுள்ளார். அப்படியான தொடர்புகள் காரணமாகவும் எனது அப்பா கூட்டணி அரசியலை முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கலாம். 

கொழும்பில் நடந்த கூட்டணியின் அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். சிறுவனான எனக்கு அரசியல் சரியாகப் புரியாவிட்டாலும், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் போன்றவர்களின் தமிழ் இன மான உணர்ச்சியை தூண்டும் கவிதைகள், பேச்சுக்கள் கூறும் மொழி மட்டும் நன்றாகப் புரிந்தது. சிறு வயதில் நானும் ஒரு தமிழ் தேசியவாதியாக இருந்திருந்தால், அது அதிசயம் அல்ல. ஆறாம் வகுப்பு படிக்கும் காலத்தில் நானும் காசி ஆனந்தன் பாணியை பின்பற்றி, "தமிழ் இன உணர்ச்சிக் கவிதைகள்" எழுதி இருக்கிறேன். அன்றைய சூழல் அப்படித் தான் இருந்தது. 

எது எப்படி இருந்த போதிலும், எனது தந்தை, "தமிழர்களுக்கு தமிழீழம் என்ற தனிநாடு வேண்டும்" என்று மனப்பூர்வமாக நம்பிய ஒருவராக இருந்தார். அந்தக் கொள்கைப் பற்று காரணமாக, ஈழப் போராட்டம் தொடங்கிய காலத்தில், கூட்டணியை துறந்து புலிகளை ஆதரிக்கத் தொடங்கினார். அந்தக் காலத்தில் புலிகள் இயக்கம் தீவிர தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்தமையும் ஒரு காரணமாக இருக்கலாம். 

1983 ஆம் ஆண்டு இனக் கலவரம் நடப்பதற்கு முன்னரே, கொழும்பு தமிழர்களுக்கு பாதுகாப்பான பிரதேசம் அல்ல என்று அப்பா உணர்ந்து கொண்டார். அதனால், சாவகச்சேரியில் பரம்பரைக் காணி ஒன்றில் வீடு கட்டி, ஒரேயடியாக தமிழரின் பூர்வீக பிரதேசத்தில் குடியேறி விட வேண்டுமென்று முடிவெடுத்தார். ஏறத்தாள வீடு கட்டி முடியும் நேரத்தில், 83 இனக் கலவரம் நடந்தது. 

நான் அப்போது யாழ் இந்துக் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவும், அம்மாவும், தங்கையும் இன்னமும் கொழும்பில் தங்கி இருந்தார்கள். ஆடிக் கலவரம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர், சாவகச்சேரி வீட்டில் விடுமுறையை கழித்த படியால், தெய்வாதீனமாக உயிர் தப்பி விட்டனர். கொழும்பில் நாங்கள் குடியிருந்த வாடகை வீடும், அதனோடிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளும், சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு தப்பவில்லை. அந்தப் பிரதேசத்தில் இருந்த தமிழர்களின் வீடுகள் ஒன்று கூட விடாமல் எரிக்கப் பட்டன. ஒன்றுமறியாத அப்பாவிகள் பலர் கொல்லப் பட்டனர்.

1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர், எங்களது குடும்பம் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக தங்கி விட்டது. அந்தக் காலகட்டத்தில் ஐம்பது வயதான எனது அப்பா, இராணுவத்தில் பணிபுரிவோர் முன்கூட்டியே ஓய்வூதியம் பெறும் சலுகையை பயன்படுத்திக் கொண்டார். கொழும்பில் பாடசாலை ஆசிரியையாக பணியாற்றிய எனது அம்மாவும், ஊரில் உள்ள ஆரம்பப் பாடசாலைக்கு மாற்றலாகி வந்தார். அதற்குப் பிறகு, எங்களது குடும்பத் தொடர்புகளும், அப்பாவின் அரசியல் ஈடுபாடும் யாழ்ப்பாணத்தை சுற்றியே மையப் படத் தொடங்கின.

ஆடிக் கலவரத்திற்குப் பின்னர், யாழ் குடாநாட்டில் கூட்டணியினரின் பாராளுமன்ற தமிழ் தேசிய அரசியல் மங்கத் தொடங்கியது. அந்த வெற்றிடத்தில், ஆயுதமேந்திய தீவிரவாத தமிழ் தேசிய அரசியல் வளர்ந்து கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் ஈழ விடுதலை இயக்கங்களின் இராணுவத் தாக்குதல்கள், பிரச்சார நடவடிக்கைகள் யாவும், யாழ் நகரை அண்டிய பகுதிகளிலேயே அதிகளவில் இடம்பெற்றன. 

எண்பதுகளில், எனது தந்தை, யாழ் நகரில் ஒரு சிறு தொழில் வளாகத்தில் மனேஜராக வேலை செய்து கொண்டிருந்தார். அதனால், போராளிக் குழுக்கள் விநியோகித்த துண்டுப் பிரசுரங்கள், பத்திரிகைகள் போன்றன அவருக்கு இலகுவாக கிடைத்து வந்தன. அந்தக் காலகட்டத்தில் அப்பாவும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகளினால் கவரப் பட்டார். தமிழ்நாட்டில் அச்சிடப் பட்டு, யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப் பட்ட, புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" பத்திரிகை பிரதிகளை வீட்டிற்கு கொண்டு வருவார். அவர் மூலமாகத் தான் எனக்கும் புலிகளின் அரசியல், இராணுவ கொள்கைகள் அறிமுகமாகின.

1984 ஆம் ஆண்டு, திம்புப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சிறிலங்கா இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப் பட்டது. யாழ் குடாநாட்டிற்குள் மக்கள் வாழ்ந்த பிரதேசங்கள் யாவும், "விடுதலை செய்யப் பட்ட பிரதேசமாக" கருதப் பட்டது. எல்லா இடங்களிலும் ஈழ விடுதலை இயக்கங்கள் அலுவலகங்களை திறந்தனர். புதிய உறுப்பினர்களை சேர்த்து பல்கிப் பெருகினர். அன்றைய காலத்தில் ஒரு சிவில் சமூகமாக இயங்கிய பிரஜைகள் குழுவில், ஊரில் பெரிய மனிதரான அப்பாவும் பங்கு பற்றினார். பிற்காலத்தில் அது புலிகளின் வெகுஜன அமைப்பாக தவறாகக் கருதப் பட்டது.

புலிகள் அமைப்பில், சாவகச்சேரி பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப் பட்ட கேடில்ஸ் தலைமையில், அவர்களது அரசியல் நடவடிக்கைகளும் அதிகரித்தன. பிரஜைகள் குழு போன்ற வெகுஜன அமைப்புகளுக்குள் புலிகளின் தலையீடு அதிகரிப்பதற்கு, கேடில்சின் நிர்வாகச் செயற்பாடுகள் காரணமாக அமைந்திருந்தன. நான் யாழ் இந்துக் கல்லூரியில் படித்த காலத்தில், கேடில்ஸ் எனக்கு சீனியர் மாணவனாக ஒரே விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். இரண்டு வருடங்களுக்குப் பின்னர், அதே மாணவன் புலிகளின் சாவகச்சேரிப் பகுதிப் பொறுப்பாளராக வருவான் என்று நான் கனவிலும் நினைத்திருக்க முடியாது.

ஈழப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில், சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் புரியப் பட்ட மனித உரிமை மீறல்கள் ஆவணப் படுத்தப் பட்டன. எனது அப்பா அந்த துறையில் மிகவும் உற்சாகமாக செயற்பட்டு வந்தார். சர்வதேச மன்னிப்புச் சபையின் (Amnesty International) செயற்பாட்டாளராக மாறினார். அவர் சேகரித்துக் கொடுத்த தகவல்கள் பல, இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளன. 

ஒரு தடவை, சர்வதேச மன்னிப்புச்சபையின் இரண்டு வெளிநாட்டு ஆர்வலர்கள், எங்களது வீட்டிற்கு வந்து தங்கியிருந்து, விருந்துண்டு விட்டு சென்றுள்ளனர். அப்போது சிறுவனாக இருந்த நான், அவர்களுக்கு பல இடங்களை கூட்டிச் சென்று காட்டியமை நினைவில் உள்ளது. ஒரு வெள்ளையினத்தவரும், கருப்பினத்தவரும் எங்களது கிராமத் தெருக்களில் வலம் வந்த நேரம், மக்கள் கூடி நின்று விடுப்புப் பார்த்தமை ஞாபகம் இருக்கிறது. சில வருடங்களுக்குப் பின்னர், மேற்கத்திய அரசு சாரா நிறுவனங்களும், அவற்றின் வெள்ளையின பிரதிநிதிகளும் எங்கள் மண்ணில் நிரந்தரமாகத் தங்கி இருந்து  செயற்படத் தொடங்கினார்கள். ஆனால், அந்தக் காலத்தில் அதெல்லாம் மிகவும் அருமையாக நடப்பவை.

"சிறிலங்காப் படைகளிடம் இருந்து விடுவிக்கப் பட்ட யாழ் குடாநாட்டில்" ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இடையே ஆயுத மோதல்கள் நடந்து, இறுதியில் புலிகள் மட்டுமே முழுமையாக அதிகாரம் செலுத்த ஆரம்பித்தனர். 1987 ஆம் ஆண்டு, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் இந்திய இராணுவம் வந்திறங்கியது. சில வருடங்களுக்கு முன்னர் புலிகளால் தடை செய்யப் பட்ட பிற இயக்கங்கள், இந்திய படையினரின் பாதுகாப்பில் கொண்டு வரப் பட்டன.

தற்போது இந்திய இராணுவத்தின் துணைப் படைகளாக மட்டுமே செயற்பட்ட ஆயுதக் குழுக்கள், புலி உறுப்பினர்கள், ஆதரவாளர்களை வேட்டையாடிக் கொன்றன. வெகுஜன அமைப்புகளான பிரஜைகள் குழுக்கள் போன்றனவும் தப்பவில்லை. புலி ஆதரவாளர்களாக சந்தேகிக்கப் பட்ட புத்திஜீவிகள் சுட்டுக் கொல்லப் பட்ட காலத்தில், அப்பாவும் தலைமறைவாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

தொண்ணூறுகளுக்கு பிந்திய காலத்தில், வன்னிப் பகுதி புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது சில வருடங்கள், வன்னியில் அரசியல் ஆர்வலராக செயற்பட்டு வந்த அப்பாவும், பின்னர் யாழ் குடாநாட்டிற்கு திரும்பிச் சென்றார். ஆனால், காலம் மாறி விட்டிருந்தது. யாழ் குடாநாட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிறிலங்கா இராணுவம், அரசியல் செயற்பாட்டாளர்களையும் கண்காணித்து வந்தது. 

அதனால், அரசியல் பேசாத சமூக சேவைகள் என்ற மட்டத்தில் மட்டுமே அப்பா செயற்பட்டு வந்தார். இந்து மத தத்துவங்களில் நம்பிக்கை கொண்ட அப்பா, தனது வாழ் நாள் முழுவதும் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டு வந்தார். இறுதியாக நான் அவரை சந்தித்து விடை பெற்ற நாட்களிலும், தான் அறிந்த ஆன்மீக உண்மைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

சாதிய, பார்ப்பனிய சடங்குகளில் இருந்து இந்து மதத்தை மீட்டெடுத்து, தத்துவங்கள் மூலம் தூய்மைப் படுத்தலாம் என்று நம்புகிறவர்களில் அப்பாவும் ஒருவர். கொழும்பில் நாம் வாழ்ந்த காலங்களில், ஹரிதாஸ் எனும் இந்திய சாமியாரின் ஆன்மீக சொற்பொழிவுகளை விரும்பிக் கேட்பார். வெள்ளிக்கிழமைகளில் ஒழுங்காக கோயிலுக்கு சென்று வருவார். மாட்டிறைச்சி உண்ண மாட்டார். 

சிறுவயதில் நானும் இந்து மத சம்பிரதாயங்களை பின்பற்றி வந்திருக்கிறேன். எனக்குப் பதினாறு வயது இருக்கும் பொழுதே, ஒரு நாஸ்திகனாக மாறியதும், இந்து மத சம்பிரதாயங்களை பின்பற்றாததும் ஏற்கனவே அவருக்கு தெரியும். ஆனால், "பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொண்ட" சில பழமைவாத, மத சம்பிரதாயங்களை, நானும் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அந்த விடயத்தில் மட்டும், இறுதிக் காலத்தில் என்னுடன் மனஸ்தாபப் பட்டார்.

அப்பா தனது வயோதிப காலத்தில், நோய்களால் உடல் பாதிக்கப் பட்டிருந்த போதிலும் சளைக்காமல் சமூகப் பணி செய்து வந்தார். யுத்தம் காரணமாக, யாழ் குடாநாட்டில் மருத்துவ வசதிகள் மோசமான நிலைமையில் இருந்தமையும் அவரது நோய்களுக்கு ஒரு காரணம். 

அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்ட படியால், பாதிக்கப் பட்ட நோயாளிகளில் அப்பாவும் ஒருவர். அவருக்கு நடந்த அறுவைச் சிகிச்சைகள் பல எதிர்மறையான விளைவுகளை தந்தன. ஒரு நோயை குணப் படுத்தி, இன்னொரு நோயை வாங்கிக் கொண்டு வந்தார். இறுதியில், சில வருடங்களுக்கு முன்னர் புற்றுநோயை குணப்படுத்துவதற்கு அளிக்கப் பட்ட சிகிச்சையின் எதிர்மறையான விளைவு அவருக்கு எமனாக வந்தது.

சாவகச்சேரியில் இருக்கும் எங்களது வீடு, 2000 ஆம் ஆண்டு நடந்த யுத்தத்தில் கடுமையாக சேதமடைந்திருந்தது. வீட்டில் இருந்த எங்கள் உடைமைகள் எல்லாம் அழிந்து நாசமாகி இருந்தன. இருப்பினும் சமாதான காலத்தில் அதைத் திருத்தி, அப்பா இறுதி வரை அங்கேயே வாழ்ந்து வந்தார். எங்கள் ஊரில் இருந்த பலர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கும், இடம்பெயர்ந்து பெரிய நகரங்களுக்கும் சென்று விட்டனர். ஆனால் அப்பா மட்டும் அந்த வீட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல் ஊரிலேயே தங்கி விட்டார்.

எனது அப்பா ஊரை விட்டு வெளியேற விரும்பாமல், சாகும் வரை அங்கேயே இருந்தமைக்கு, சில உணர்வுபூர்வமான காரணங்கள் இருந்தன. சுமார் 20 வருடங்களுக்கு முன்னர், பருவ வயதை எட்டியிருந்த எனது தங்கை, எதிர்பாராவிதமாக இரத்தப் புற்றுநோய் வந்து இறந்தார். சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் அம்மா ஒரு விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அதனால் அப்பாவுக்கு அந்த வீட்டை விட்டுப் பிரிய மனமின்றி, அந்திமக் காலத்தில் நோய்களுடன் போராடிக் கொண்டே வாழ்ந்து வந்தார். இரண்டு தம்பிகள், இன்னொரு தங்கை அந்த வீட்டில் வாழ்ந்து வந்தனர். சில உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிட்டியிருந்தது.

இருப்பினும், எனது தந்தை யாருடைய உதவியையும் எதிர்பாராமல், இறுதிவரையில் தனது சொந்தப் பலத்தில் வாழ விரும்பினார். ஓர் ஈழத் தமிழ் அரசியல் - சமூக ஆர்வலரான எனது தந்தைக்கு அஞ்சலி செலுத்தி, இந்தக் கட்டுரையை அவருக்கு சமர்ப்பிக்கிறேன். எனது தங்கையுடனும், அம்மாவுடனும், விண்ணுலகில் சேர்ந்து கொண்ட அப்பாவின் ஆத்மா சாந்தி அடைவதாக.
    


அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபாலி கொலையில் பல மர்மங்கள்


ஒரு ISIS ஜிகாதிப் போராளி, அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபாலி (James Foley) இன் தலையை வெட்டிக் கொன்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தக் காட்சிகளை படமாக்கிய ISIS, வழமை போல அந்த வீடியோவையும் யூடியூப்பில் போட்டதாக கூறப் படுகின்றது. ஆனால், அதைப் பார்த்தவர்கள் மிக மிகக் குறைவு. Google நிறுவனத்திற்கு சொந்தமான Youtube, அந்த வீடியோவை உடனே அழித்து விட்டது.

இன்னொரு விசித்திரமான சம்பவம் நடந்தது. Twitter நிறுவனம், அந்த வீடியோவை அல்லது தலை வெட்டும் காட்சிகளை பகிர்ந்து கொள்வோரின் டிவிட்டர் கணக்கு இடைநிறுத்தப் படும் என்று அறிவித்தது. ஏற்கனவே பகிர்ந்து கொண்டவர்கள் இரண்டு நாட்களுக்கு டிவிட்டர் பக்கம் வர விடாமல் தண்டிக்கப் பட்டார்கள்.

இந்தத் தகவலை டிவிட்டரே நேரடியாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது. ஏற்கனவே, ISIS சிரியாவில்  பலரது தலைகளை துண்டித்து, அவற்றை பகிரங்கமாக இணையத்தில் வெளியிட்டது. அவை டிவிட்டரில் பல தடவைகள் பகிர்ந்து கொள்ளப் பட்ட போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

ஜேம்ஸ் ஃபாலி கொலைக் காட்சிகளை காட்டும், அமெரிக்க அரசினால் தேர்ந்தெடுக்கப் பட்ட புகைப்படங்கள் மட்டும் அனுமதிக்கப் பட்டன. அதைத் தான் தற்போது எல்லா ஊடகங்களும், சமூக வலையமைப்புகளும் பயன்படுத்தி வருகின்றன. மேலும் ISIS ஏற்கனவே பல நூற்றுக் கணக்கானோரின் தலைகளை வெட்டிய பொழுது கவனிக்காத ஊடகங்கள், ஒரு அமெரிக்கரின் கொலைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்தன.

2012 நவம்பர் மாதம் ஜேம்ஸ் ஃபாலி கடத்தப் பட்டு காணாமல்போயுள்ளார். அப்போது, சிரிய அரச படைகளே அவரைக் கடத்திச் சென்றதாக, வட அமெரிக்க ஊடகங்கள் சில அறிவித்தன. அப்படிச் சொல்வதற்கு ஒரு காரணம் இருந்தது. ஜேம்ஸ் ஃபாலி, இதே ISIS பயங்கரவாத நண்பர்கள் கொடுத்த தகவல்களைத் தான், செய்திகளாக சேகரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஜேம்ஸ் ஃபாலி என்ற அமெரிக்க ஊடகவியலாளரின் கொலை, உண்மையிலேயே நடந்ததா என்பதே சந்தேகத்திற்குரியது. ஆனால், அதைக் கொண்டு உலக மக்கள் முழுவதையும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்துவதற்கு, ஊடகங்கள் அயராது பாடுபட்டன. என்ன இருந்தாலும், அமெரிக்க இரத்தம் விலை மதிப்பற்றது அல்லவா?

அமெரிக்கா தானே வளர்த்து விட்ட இசிஸ் எனும் பூதத்துடன் போரிட்டு அடக்கப் போவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிகின்றது. இது வரை காலமும், அமெரிக்க விமானங்கள் போட்ட குண்டுகள் இசிஸ் அமைப்பை நிலைகுலைய வைக்கவில்லை. யாருமற்ற பாலைவனத்தில் குண்டு போட்டால் என்ன பிரயோசனம்?

பெஷ்மேர்கா எனப்படும் ஈராக்கிய குர்திஷ் படையினர், இசிஸ் நவீன ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும், தம்மிடம் அந்தளவு ஆயுத பலம் இல்லை என்றும் குறைப் பட்டனர். ISIS போராளிகள், அமெரிக்க ஹம்வீ கவச வாகனங்களை பயன்படுத்துகின்றனர். சிறிய ரக ஆயுதங்களினால் அவற்றை ஒன்றும் செய்ய முடியாது. டயர் பார்த்து சுட்டால் கூட, சில்லுக்கு காற்றுப் போன நிலையிலும் 80 கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்று நிற்கும் வல்லமை கொண்டது.

ஹம்வீ கவச வாகனங்களை எதிர்த்து நிற்க முடியாமல், பல இடங்களில் பெஷ்மேர்கா படையணிகள் பின்வாங்கி ஓடியுள்ளன. தற்போது அமெரிக்காவும், பிரிட்டனும் பெஷ்மேர்கா படையினருக்கு உதவி செய்யப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். அவை கனரக ஆயுதங்களாக இருக்குமா என்று தெரியவில்லை.

கடைசியாக, "மனித குலத்திற்கு விரோதமான ISIS அமைப்பை முற்றாக அழிக்கப் போவதாக" அமெரிக்க அரசு சூளுரைத்துள்ளது. இதிலே முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், ISIS இயக்கத்தை அழிக்க வேண்டுமானால், சிரியாவுகுள்ளே சென்றும் போரிட வேண்டி வரும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. சிரியாவில் ஒரு பகுதியையும், ஈராக்கில் ஒரு பகுதியையும் தனது இஸ்லாமிய அரசு என்று ISIS அறிவித்துள்ளமை அனைவரும் அறிந்ததே.

ஆனால், எதற்காக சிரியாவுக்குள் அமெரிக்கப் படைகள் செல்ல வேண்டும்? மிகவும் பலவீனமான நிலையில் உள்ள ஈராக் அரசுடன், சிரிய அரசை ஒப்பிட முடியாது. இசிஸ் போன்ற கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான போரில், சிரிய அரச படைகள் குறிப்பிடத் தக்க வெற்றிகளை பெற்றுள்ளன. முன்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பல பிரதேசங்களை விடுவித்துள்ளன. தற்போது, சிரியாவில் ISIS அமைத்துள்ள இஸ்லாமிய அரசின் தலைநகரம் என்று கருதப்படும், ராக்கா நகரினை கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றன. ராக்கா மீது, சிரியப் படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தி, ISIS பாதுகாப்பு அரண்களை நிலைகுலைய வைத்துள்ளது. 

ராக்கா நகருக்கு அருகாமையில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த விமானத் தளம், தற்போது சிரிய அரச படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. சிரியாவினுள் அமெரிக்கப் படை நடவடிக்கை எடுக்கப் படுமானால், அந்த விமானத் தளம் முக்கியமாக இருக்கும். ISIS பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது தான், அமெரிக்காவின் உண்மையான நோக்கம் என்றால், அதனை சிரிய அரசுடன் சேர்ந்து செய்யலாமே? சிரிய அரச படைகளுக்கு ஆயுதங்களை வழங்கலாமே?

ISIS என்பது யார்? அவர்களது கொள்கைகள் என்ன? குறிக்கோள் என்ன? இவை எல்லாம் அறியாமல், முன்னொரு காலத்தில் அமெரிக்கா அவர்களை ஆதரிக்கவில்லை. அமெரிக்கர்கள் அந்தளவு வெகுளிகளாக இருப்பார்கள் என்று நினைத்தால், நாங்கள் தான் அறிவிலிகள் ஆவோம். "அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் சுதந்திரமாக செயற்படுவதாக" நாங்கள் நம்பினாலும், அமெரிக்கர்களுக்கு அதனால் எந்த நஷ்டமும் இல்லை. சிரியாவை ஆக்கிரமிப்பதும், அதன் மூலம் ஈரானின் கழுத்தை இறுக்குவதும் தான், அமெரிக்காவின் நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு, ISIS ஒரு சாட்டாக பயன் படுகின்றது. தேவை முடிந்த பின்னர் ISIS இயக்கத்தை முற்றாக அழித்து விடலாம். 

இருபது வருடங்களுக்கு முன்னர், அல்கைதாவும், தாலிபானும் அமெரிக்காவால் உருவாக்கப் பட்டன. பிறகு அவற்றை எதிர்த்துப் போராடப் போவதாகக் கூறி, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தன. அதையெல்லாம் நாங்கள் இப்போது மறந்து விட்டோம்.

"எல்லாம் அவன் செயல்!" 
"அவனன்றி ஓர் அணுவும் அசையாது!"
    

 

அமெரிக்க சந்தையில் விற்கப் பட்ட வெள்ளையின அடிமைகள்


அமெரிக்கக் கண்டத்திற்கு ஆப்பிரிக்க கருப்பர்கள் அடிமைகளாக கொண்டு செல்லப் பட்ட வரலாறு அனைவருக்கும் தெரியும். ஆனால், "புதிய உலகம்" என அழைக்கப் பட்ட அமெரிக்கக் கண்டத்தில், வெள்ளையின அடிமைகளும் விற்கப் பட்டனர். இங்கிலாந்தின் முதலாவது காலனியான, அயர்லாந்தில் நடந்த இனப்படுகொலைக்குப் பின்னர், அங்கு வாழ்ந்த ஐரிஷ் மக்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டனர். ஐந்து இலட்சம் ஐரிஷ் பெண்கள், அமெரிக்காவில் பாலியல் அடிமைகளாக விற்கப் பட்டனர். 

உலகில் பல நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளும், இனச் சுத்திகரிப்புகளும் பாராளுமன்ற ஜனநாயகத்தை கொண்டுள்ள நாடுகளில் தான் அதிகளவில் நடந்துள்ளன. பாராளுமன்ற ஜனநாயகம் சுதந்திரமான தேர்தல்களை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 19 ம் நூற்றாண்டில் கூட ஐரோப்பாவில் சில நாடுகளில் இருந்த மன்னராட்சி முறைக்கு மாற்றாகத் தான் பாராளுமன்ற ஜனநாயகம் கொண்டு வரப் பட்டது.

உலக வரலாற்றில் முதல் தடவையாக இங்கிலாந்தில் தான் பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்பட்டது. மன்னராட்சிக்கு எதிராக கலகம் செய்த, ஆங்கிலேய மேட்டுக் குடியினரின் பிரதிநிதியான ஒலிவர் குரொம்வெல், பேரழிவைத் தந்த உள்நாட்டுப் போரை வழிநடத்தினார். போரின் முடிவில், இங்கிலாந்து மன்னர் சிரச் சேதம் செய்யப் பட்டார். பாராளுமன்றம் இங்கிலாந்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. உலகில் முதல் தடவையாக பாராளுமன்ற ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டிய குரொம்வெல், ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி செய்தார்.

குரொம்வெல் தலைமையிலான புரட்டஸ்தாந்து படையினர், புரட்சியாளர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் மன்னருக்கு ஆதரவான நிலப்பிரபுக்களின் அதிகாரத்தை ஒழித்தார்கள். ஆனால், பழைய நிலப்பிரபுக்களின் நிலங்கள், குரொம்வெல்லின் போர்வீரர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் பங்கிடப் பட்டது. இன்று பிரிட்டனில் உள்ள நிலவுடமையாளர்கள் பலர், குரொம்வெல் காலத்தில் நிலங்களை அபகரித்தவர்கள் தான். வட அயர்லாந்தில், அது இன்றைக்கும் எரியும் பிரச்சினையாக உள்ளது.

பிரிட்டிஷ் காரர்கள், அயர்லாந்தில் நடத்திய இனப்படுகொலைகள், இனச் சுத்திகரிப்புகளை, பிற்காலத்தில் அனைத்துக் காலனிகளிலும் அறிமுகப் படுத்தினார்கள். வட அமெரிக்கக் கண்டத்தில் குடியேறிய ஐரோப்பிய காலனியவாதிகள், ஆரம்பத்தில் செவ்விந்திய பூர்வ குடிகளுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள். கனடா முதல் மெக்சிகோ வரையில், ஆயிரக் கணக்கான கலப்பின காலனிகள் உருவாகி இருந்தன.

அதாவது, ஐரோப்பிய குடியேறிகளும், செவ்விந்தியர்களும் அருகருகே அயல் கிராமங்களாக வாழ்ந்து வந்தனர். நிறைய கலப்புத் திருமணங்களும் நடந்துள்ளன. ஆனால், பிற்காலத்தில் அமெரிக்காவில் அரசு அதிகாரத்தை நிலைநாட்டிய அதிகார வர்க்கத்தினர், இனக் கலப்பை தடை செய்தார்கள். அதற்குப் பிறகு தான், காலனிய விஸ்தரிப்பு யுத்தங்கள் நடந்தன. செவ்விந்திய பூர்வ குடிகள் இனவழிப்பு செய்யப் பட்டனர்.

17 ஆம் நூற்றாண்டின் மத்தியில், மன்னராட்சியை தூக்கியெறிந்து புரட்சி செய்த ஒலிவர் குரொம்வெல், அயர்லாந்து புரட்சியை மிகக் கொடூரமாக ஒடுக்கினார். அயர்லாந்து தீவில், பெருமளவு விவசாய நிலங்கள் ஆங்கிலேய நிலப்பிரபுக்களின் கீழ் இருந்தன. நிலப்பிரபுக்களின் மேலாதிக்கத்திற்கு எதிராக ஐரிஷ் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அந்த மக்கள் எழுச்சியின் போது சுமார் 4000 பேர் கொல்லப் பட்டனர். ஆங்கில நிலப்பிரபுக்கள், ஐரிஷ் தொழிலாளர்களினால் படுகொலை செய்யப் பட்டனர். அது ஒரு வர்க்கப் புரட்சியாக இருந்தாலும், அன்றைய காலகட்டத்தில் (17 ஆம் நூற்றாண்டு)கத்தோலிக்க - புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களுக்கு இடையிலான மதப் பிரச்சினையாக தான் ஆரம்பித்தது.

குரொம்வெல் அனுப்பிய ஆங்கிலேயப் படைகள், ஐரிஷ் மக்கள் எழுச்சியை ஈவிரக்கமின்றி நசுக்கியது. கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்கள் தூக்கிலிடப் பட்டனர். அவர்களை பின்பற்றியவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது. ஆனால், இரண்டு நிபந்தனைகள். இங்கிலாந்துடன் போரில் ஈடுபட்டிருக்கும் எதிரி நாட்டிற்கு செல்லக் கூடாது. மனைவி, பிள்ளைகளை விட்டு விட்டுச் செல்ல வேண்டும். பெருமளவு ஐரிஷ் கிளர்ச்சியாளர்கள் அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டார்கள். அதனால், அயர்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில், பெண்களும் குழந்தைகளும் தனித்து விடப் பட்டனர்.

அயர்லாந்தின் நிலங்கள் மறு பங்கீடு செய்யப் பட்டன. கிளர்ச்சியை நசுக்குவதற்கு உதவிய பிரிட்டிஷ் படைவீரர்களுக்கு ஊதியமாக நிலங்கள் வழங்கப் பட்டன. எஞ்சிய ஐரிஷ் நிலவுடமையாளர்களுக்கு, பிரயோசனமற்ற தரிசு நிலங்கள் ஒதுக்கப் பட்டன. நாடுகடத்தப் பட்ட புரட்சியாளர்களின் குடும்பத்தினர், அந்த நிலங்களில் வேலை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

1652 ஆம் ஆண்டு, இங்கிலாந்து பாராளுமன்றம் ஒரு சட்டம் இயற்றியது. "தன்னைத் தானே பராமரிக்க முடியாத, அதாவது போதிய வருமானம் இல்லாத ஐரிஷ் பெண்கள், அடிமை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப் படலாம்." அயர்லாந்தை ஆக்கிரமிக்கும் போர் முடிந்த பின்னர் வேலையற்று இருந்த முன்னாள் போர்வீரர்கள், ஐரிஷ் பெண்களையும், குழந்தைகளையும் சுற்றி வளைத்து பிடித்து விற்று விடத் தொடங்கினார்கள். மாடுகளை பிடித்து பட்டியில் அடைத்து வைத்து குறி சுடுவது போன்று, பிடிபட்ட ஐரிஷ் அடிமைகளுக்கும் செய்தார்கள்.

இங்கிலாந்து பாராளுமன்ற ஒப்புதலுடன், அடிமை வியாபாரிகள் ஐரிஷ் பெண்களை கப்பல்களில் கொண்டு சென்று, அமெரிக்காவில் விற்றார்கள். ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறி இருந்த வசதி படைத்த ஆங்கிலேயர்கள், அழகான இளம் வயது ஐரிஷ் பெண்களை வாங்கி, தமது வீடுகளில் பாலியல் அடிமைகளாக வைத்துக் கொண்டார்கள். அழகில்லாத பெண்கள், பெருந்தோட்ட முதலாளிகளின் வீடுகளில் பணிப் பெண்களாக விற்கப் பட்டனர். சிலர் சிறுமிகளைக் வாங்கிச் சென்று பாவித்து விட்டு விபச்சார விடுதிகளில் தள்ளி விட்டார்கள்.

பார்படோஸ் தீவுக்கு கொண்டு சென்று இறக்கப் பட்ட வெள்ளையின ஐரிஷ் அடிமைகள், அங்கிருந்த பெருந்தோட்ட முதலாளிகளினால் கால்நடைகளைப் போன்று நடத்தப் பட்டனர். ஐரிஷ் பெண் அடிமைகளுடன் உறவு கொள்ளும் முதலாளிகள், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளை விபச்சார விடுதிகளுக்கு விற்றனர். தம்மிடம் இருந்த கறுப்பின அடிமைகளை உறவு கொள்ள வைத்து, ஐரிஷ் பெண்களை பிள்ளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாக வைத்திருந்தார்கள். ஏனெனில், கறுப்பு - வெள்ளை கலப்பில் பிறந்த சிறுமிகளை, விபச்சார விடுதிகளில் நல்ல விலைக்கு விற்க முடிந்தது.

பார்படோசில் அடிமைகளாக கொண்டு வரப்பட்ட ஐரிஷ் பெண்களின் வழித்தோன்றல்கள் இன்றைக்கும் அங்கே வாழ்கின்றனர். சுமார் 400 பேரளவில், மிகவும் வறுமையான நிலையில் சேரிகளில் வசிக்கின்றனர். அவர்கள் மட்டுமே தமது முன்னோரின் அயர்லாந்து பூர்வீகத்தை அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த நாட்டில் மிகச் சிறுபான்மையான இனம் என்பதால், பகை முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்வதற்காக ஒதுங்கி வாழ்கின்றனர்.

குறைந்தது ஐந்து இலட்சம் ஐரிஷ் அடிமைகள், அமெரிக்காவுக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் அனுப்பப் பட்டுள்ளனர். சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. 1833 ஆம் ஆண்டு அடிமை முறை ஒழிக்கப் படும் வரையில், இந்த அடிமை வாணிபம் தொடர்ந்திருக்கிறது. கூடவே இன்னொரு காரணமும் சேர்ந்து கொண்டது. அடிமை வாணிபத்தில் ருசி கண்ட முன்னாள் பிரிட்டிஷ் படையினர், ஏழை ஆங்கிலேய சிறுமிகளை பிடித்தும் அடிமைகளாக விற்கத் தொடங்கி விட்டார்கள். அதனால், வெள்ளையின அடிமைகள் தொடர்பாக இங்கிலாந்தில் பல பக்கங்களில் இருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் நூல்களை வாசிக்கவும்: 
White Cargo: The forgotten history of Britain's white slaves in America 
To Hell or Barbados: The Ethnic Cleansing of Ireland
    

 


புலிப் பார்வைக்குப் பின்னால் RAW இன் நரிப் பார்வை!


தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்களும், தமிழ் உணர்வாளர்களும், ஈழப் போராட்டத்தில் இருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதை, அங்கு நடக்கும் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. 

ஒரு காலத்தில் அடுத்த தேசியத் தலைவர் ஸ்தானத்தில் இருந்த சீமான், இன்று ஒரு பகுதி தமிழ் தேசியர்களினால் தூற்றப் படுகின்றார். புலிப்பார்வை, கத்தி போன்ற வணிகப் படங்களுக்கு சீமான் வழங்கிய ஆதரவு, அதற்கு எதிரான மாணவர் போராட்டம் என்பன, தமிழக தமிழ் இன உணர்வாளர்கள் மத்தியில் ஒரு பெரிய பிளவை உண்டாக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று நடக்கும் அதிரடி அரசியல் மாற்றங்கள், ஏற்கனவே ஈழப் போராட்ட வரலாற்றில் நடந்துள்ளன. ஈழப் போராட்ட வரலாற்றை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களினால், இன்றைய தமிழக நெருக்கடியில் இருந்தும் மீள முடியாது. தமிழ் உணர்வாளர்கள், தமிழ் தேசியவாதிகள் என்று அழைத்துக் கொள்வோரின் பலத்தையும், பலவீனத்தையும் சரியாக கணிக்கத் தெரிந்த RAW, அதற்கு ஏற்ற மாதிரி காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.

ஈழப் போரின் முடிவில், அதாவது 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் நாட்டில் ஏற்பட்ட தமிழ் தேசிய எழுச்சி, ஈழத்தில் 1983 கலவரத்திற்குப் பின்னரான காலகட்டத்துடன் ஒப்பிடத் தக்கது. இரண்டுக்கும் இடையில் நெருங்கிய ஒற்றுமைகள் உள்ளன. ஒரேயொரு வேறுபாடு, ஈழத்தில் ஆயுதங்கள் மூலம் முரண்பாடுகள் தீர்க்கப் பட்டன. தமிழகத்தில் அதற்கான தேவை இருக்கவில்லை.

எழுபதுகளில், ஈழ விடுதலைப் போராட்டம் மிகச் சிறிய குழுக்களாக இயங்கிய இடதுசாரிகளினால் வழிநடத்தப் பட்டது. பிற்காலத்தில் தீவிர தமிழ் தேசியவாத இயக்கங்களாக கருதப் பட்ட விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியனவையும், அவற்றின் அரசியல் பிரிவுகள் இடதுசாரி சிந்தனை கொண்டவர்களினால் தலைமை தாங்கப் பட்டு வந்தன. 2009 க்கு முந்திய தமிழ் நாட்டிலும் அது தான் நிலைமை.

ராஜீவ் கொலைக்குப் பின்னர், தடா, பொடா சட்டங்களின் அடக்குமுறை காரணமாக, முந்திய ஈழ ஆதரவாளர்கள் அடக்கப் பட்டனர். பெரும்பான்மை தமிழர்களின் வாய்கள் அடைக்கப் பட்டன. அந்த தருணத்தில், மகஇக போன்ற கம்யூனிச அமைப்புகள் தான், ஈழ விடுதலைக்கும் ஆதரவாக குரல் கொடுத்து வந்தன. விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தலித் மக்களின் கட்சியும், தனது ஆதரவாளர்கள் சிலரை வன்னிக்கு அனுப்பும் அளவிற்கு ஆதரவளித்தது.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினால் தெரிவு செய்து அனுப்பப் பட்ட இளைஞர்கள், வன்னி சென்று இராணுவப் பயிற்சி எடுத்து, போர்க் களத்திலும் நேரடியாக பங்காற்றி உள்ளனர். இந்தத் தகவல் இன்று வரையில் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளது. நக்சலைட் அமைப்புகள், தலித்திய அமைப்புகள் ஈழப் போராட்டத்தை ஆதரிப்பது, ஒரு பெரிய திருப்புமுனை. இந்திய அரசுக்கு அவற்றை அடக்க முடியாத அளவிற்கு நெருக்கடி தோன்றியது. ஏனெனில், கம்யூனிஸ்டுகள், தலித்தியவாதிகளை அடக்குவது, சில நேரம் எதிர்மறையான விளைவுகளை தரலாம். ஆந்திராக் காடுகளில், மாவோயிஸ்டுகளுக்கு முன்னாள் ஈழப் போராளிகள் சிலர் பயிற்சி அளித்தனர் என்ற தகவல் இங்கே குறிப்பிடத் தக்கது.

இந்தப் பின்னணியில் தான், 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் புலிகள் முற்றாக அழித்தொழிக்கப் பட்டனர். அதன் எதிர்வினையாக, தமிழ்நாட்டில் ஓர் மக்கள் எழுச்சி உண்டாகலாம் என்று RAW அஞ்சியது. அதனால், தீவிர தமிழ் தேசியம் பேசும், கம்யூனிசத்தை வெறுக்கும் வலதுசாரி கொள்கை கொண்ட அமைப்புகளை வளர்த்து விட வேண்டும் என்று திட்டமிட்டது. அதன் விளைவாக, நாம் தமிழர் கட்சியும், மே 17 இயக்கமும், குறுகிய காலத்திற்குள் அசுர வளர்ச்சி கண்டன.

இரண்டு தசாப்த காலமாக, ஈழ விடுதலைக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய கம்யூனிச அமைப்புகள், இன்றைக்கும் அப்படியே தான் இருக்கின்றன. அப்படியான அமைப்புகள் இருப்பதே பெரும்பாலான தமிழர்களுக்கு தெரியாது. ஆனால், 2009 ஆம் ஆண்டு திடீரென முளைத்த தீவிர தமிழ் தேசியவாத அமைப்புகள், ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் ஆயிரக் கணக்கான உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் பெற்று வளர்ந்தது எப்படி? இடதுசாரி அமைப்புகள் நடத்திய எந்தவொரு ஈழ ஆதரவுப் போராட்டத்தையும் கண்டுகொள்ளாத தமிழக வெகுஜன ஊடகங்கள், நாம் தமிழர், மே 17 க்கு மட்டும் அதீத முக்கியத்துவம் கொடுத்த காரணம் என்ன?

ஈழத்தில் 1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர், குறிப்பிட்ட சில இயக்கங்கள் மட்டுமே பெருமளவு ஆதரவை திரட்டிக் கொள்ள முடிந்தது. அன்றைய காலகட்டத்தில் புலிகளும், டெலோவும் முன்னணியில் நின்றன. டெலோவுக்கு இந்திய மத்திய அரசு நேரடியாக நிதியுதவி வழங்கியது. புலிகளுக்கு அன்றைய தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் நிதி வழங்கினார். எம்ஜிஆர் சுதந்திரமாக இயங்கவில்லை. அவரும் இந்திய அரசின் அனுசரணையின் பேரில் ஒரு முகவராக செயற்பட்டார்.

புலிகளையும், டெலோ வையும் இந்தியா முக்கியத்துவம் கொடுத்து ஆதரித்தமைக்கு ஒரு காரணம் இருந்தது. அந்த இயக்கங்களில் வலதுசாரிகளின் கை ஓங்கி இருந்தது. மார்க்சிய- லெனினிசத்தை தமது சித்தாந்தமாக அறிவித்துக் கொண்ட பிற ஈழ விடுதலை இயக்கங்களை ஓரங் கட்ட வேண்டுமென்றால், இப்படியான தீவிர வலதுசாரி - தேசியவாத சக்திகளை வளர்த்து விட வேண்டும். இந்தியாவின் நோக்கம் எந்தளவு தூரம் நிதர்சனமாகி உள்ளது என்பதை, வரலாறு கூறுகின்றது.

1984 ஆம் ஆண்டு, ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற பெயரில், LTTE, TELO, EPRLF, EROS ஆகிய நான்கு இயக்கங்கள் தமக்குள் ஒன்று பட்டு, ஒரே அமைப்பாக இயங்க விரும்பின. தமிழர்கள் ஒற்றுமையாக சேர்ந்து ஒரே அமைப்பாக போராடுவது, இந்திய, இலங்கை அரசுக்களைப் பொறுத்தவரையில் ஒரு கெட்ட கனவு. எப்பாடு பட்டாவது அந்த ஒற்றுமையை குலைக்கவே முயற்சிப்பார்கள். ஈசாப்பின் நீதிக் கதைகளில் வருவதைப் போல, "ஒற்றுமையாக மேய்ந்த நான்கு மாடுகள், ஓநாயின் புத்திமதியை கேட்டு, பிரிந்து சென்று மேய்ந்த கதை" ஈழத்தில் நடந்தது. அதன் விளைவு என்னவென்று இன்று பலர் கண்கூடாக பார்க்கக் கூடியதாக உள்ளது.

தமிழ்நாட்டில், நாம் தமிழர், மே 17 இயக்கங்கள் ஆரம்பத்தில் ஒற்றுமையாக செயற்படுவதாக நடந்து கொண்டன. தமக்கிடையே எந்தவொரு கொள்கை முரண்பாடும் இல்லையென காட்டிக் கொண்டன. அன்று அவர்களின் பொது எதிரி மத்தியில் சோனியா அரசு, மாநிலத்தில் கருணாநிதி அரசாக இருந்தது. இதுவும் ஆரம்ப கால ஈழப் போராட்ட இயக்கங்களை நினைவுபடுத்துகின்றது. 

1983 ஆம் ஆண்டு ஈழ விடுதலை இயக்கங்கள் ஒற்றுமையாக இருப்பது போன்றும், தமக்கிடையே கொள்கை முரண்பாடு எதுவும் இல்லை என்றும் காட்டிக் கொண்டன. அவற்றின் பொது எதிரி, மத்தியில் ஆட்சியமைத்த ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் யு.ஏன்.பி. கட்சி, வடக்கு-கிழக்கு மாகாண பாராளுமன்ற பிரதிநிதிகளான அமிர்தலிங்கத்தின் த.வி.கூ. கட்சியாக இருந்தது. கருணாநிதியும் தி.மு.க.வும், தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாக தமிழ்நாட்டில் ஒரு பெரும் அரசியல் இயக்கம் எழுந்தது. அதே மாதிரி, அன்று ஈழத்தில் த.வி.கூ.வும், அமிர்தலிங்கமும் தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாக ஒரு பெரும் அரசியல் இயக்கம் எழுந்தது.

ஈழத்தில் புலிகளும், டெலோவும் தமக்கு இடையிலான முரண்பாட்டை ஆயுதங்கள் மூலம் தீர்த்துக் கொண்டனர். அதனால், ஓர் இயக்கம் போராட்டத்தில் இருந்து முற்றாக ஒதுக்கப் பட்டது. தமிழ்நாட்டில் எந்த அமைப்பும் ஆயுதம் வைத்திருக்கவில்லை. அதனால், நாம் தமிழர், மே 17 க்கு இடையில் ஒரு "சகோதர யுத்தம்" நடப்பதற்கு, சில திரைப்படங்கள் குறித்த சர்ச்சை போதுமானதாக உள்ளது. மேலும், இலங்கை இறைமை கொண்ட இன்னொரு நாடு என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். அங்கே இந்தியாவால் நேரடியாகத் தலையிட முடியாது. முதலில் ஈழ விடுதலையை ஆதரிப்பது போல நடிக்க வேண்டும். சிறிலங்கா அரசை அடிபணிய வைப்பதற்காக, போராளிக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டும். இப்படி எத்தனை கஷ்டங்கள்?

ஆனால், தமிழ்நாட்டில் அந்தளவு சிரமப் படத் தேவையில்லை. RAW நினைத்தால், எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும். சிறிய சந்தேகம் தோன்றினாலே, சுட்டுக் கொன்று விடும் அளவிற்கு எச்சரிக்கையாக இருந்த, ஈழ விடுதலை இயக்கங்களுக்கு உள்ளேயே RAW ஊடுருவ முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் அரசியல் அமைப்புகளுக்குள் ஊடுருவுவது ஒரு கடினமான விடயமா? 

அது சரி, உளவாளிகளை எப்படி இனங்கண்டு கொள்ள முடியும்? ஏனென்றால், அவர்களும் மிகத் தீவிரமான தமிழ் தேசியம் பேசுவார்கள். புலிகளுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக கூறுவார்கள். தமிழீழத்தை, புலிகளை விமர்சிக்கும் எல்லோரையும் பாய்ந்து குதறுவார்கள். இவர்களை கண்டுபிடிப்பது என்பது, நெல்லில் கல் பொறுக்குவது போன்றது.

புலிப்பார்வை திரைப்படம் குறித்த சர்ச்சைகள் எழுந்த நேரம் தான் இன்னொரு செய்தியும் வந்தது. அதை யாரும் கவனத்தில் எடுக்கவில்லை. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து, மாவோயிஸ்டுகள் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்குள் ஊடுருவி விட்டதாக உளவுத் தகவல்கள் கூறுகின்றன. மாநில காவல்துறை விழிப்புடன் இருக்குமாறு, இந்திய மத்திய அரசு தகவல் அனுப்பியுள்ளது. தமிழ் நாட்டு மக்களை மாவோயிஸ்டுகள் பக்கம் திரும்ப விடாமல் தடுக்க வேண்டுமானால், இன்னும் இன்னும் தமிழ் தேசிய உணர்வை தூண்டி விட வேண்டும். புலிப் பார்வை, கத்தி போன்ற திரைப் படங்கள், RAW தனது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள பெரிதும் உதவியுள்ளன.

தமிழ் நாட்டில் "ரா"மையாவின் ஆட்டம் ஆரம்பம்.

*****

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 
தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்
இந்துத்துவா கொடியில் பூத்த, சிங்கள-தமிழ் இனவாத மலர்கள்
சிங்கள அரசை பலப்படுத்தும், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள்
ஈழத்தின் யதார்த்தம் புரியாத தமிழக தமிழினவாதிகள்
    

ஈராக்கில் முருகனை வழிபடும் யேசிடி மக்கள் - ஒரு வரலாறு

முருகனைப் பற்றிய கதை ஒன்றை, இந்துக்களும், இந்து அல்லாதவர்களும் கேள்விப் பட்டிருப்பார்கள். சிவனும், பார்வதியும் தமது பிள்ளைகளான விநாயகர், முருகனுக்கு இடையில் மாங்கனி யாருக்கு கொடுப்பது என்பதற்காக ஒரு போட்டி வைத்தனர். “யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கு தான் இந்த மாங்கனி” என்று அறிவித்தனர். முருகன் தனது வாகனமான மயில் மேலேறி, பூமியை சுற்றி வருவதற்குள், விநாயகர் தந்தையையும், தாயையும் சுற்றி வந்து மாங்கனியை பெற்றுக் கொண்டாராம். இதனால் கோபமடைந்த முருகன், பூமியில் சென்று தங்கி விட்டாராம்.

மேற்குறிப்பிட்ட இந்து புராணக் கதை, பிற்காலத்தில் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, பிள்ளைகள் தாய், தந்தையருக்கு அடி பணிந்து நடக்க வேண்டும் என்ற நிலப்பிரபுத்துவ கலாச்சார கருத்தியல், பிற்காலத்தில் வலிந்து புகுத்தப் பட்டிருக்க வேண்டும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இந்தியாவில் இருந்து பத்தாயிரம் மைல் தொலைவில் உள்ள ஈராக்கில் வாழும், யேசிடி மதத்தை பின்பற்றும் மக்கள் மத்தியில், கிட்டத்தட்ட இதே மாதிரியான புராணக் கதை இருந்து வருகின்றது.

யேசிடி என்பது, கிறிஸ்தவம், இஸ்லாம் எதிலும் சேராத தனித்துவமான மதம். யேசிடி மத நம்பிக்கையின் படி, கடவுள் பூமியை படைத்தார். அதன் பிறகு, பூமியை பாதுகாப்பதற்காக, கடவுளின் தெய்வீக ஒளியில் இருந்து ஏழு தெய்வங்கள் அவதரித்தனர். ஏழு பேரில் ஒருவரான தவசி மாலிக் என்ற மயில், தலைமைப் பொறுப்பிற்கு நியமிக்கப் பட்டது. பின்னர் கடவுள் முதல் மனிதனான ஆதாமை படைத்த நேரம், எல்லாத் தெய்வங்களும் அந்த மனிதனை வணங்க வேண்டும் என்று உத்தரவிட்டாராம். 

தவசி மாலிக் மட்டும் அந்த உத்தரவுக்கு அடி பணிய மறுத்து விட்டது. “தங்களின் ஒளியில் இருந்து பிறந்த நான், எவ்வாறு தங்களின் துகள்களில் இருந்து பிறந்த மனிதனை வணங்க முடியும்?” என்று கேட்டது. அதனால் தவசி மாலிக் கடவுளின் கருணையை இழந்து விட்டது. ஆயினும் நடந்ததற்காக வருந்தியதால், பூமியில் கடவுளின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டது.

முருகனைப் பற்றிய கதைகளில் ஒன்று, முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் எப்படி வந்தது என்பதைக் கூறுகின்றது. முருகன் குழந்தையாக இருந்த நேரம், ஏழு அல்லது ஆறு கார்த்திகைக் கன்னியர்கள் அவனை சரவணப் பொய்கையில் நீராட்டினார்கள். அதனால் முருகனுக்கு ஆறு தலைகள் உண்டாகி, கார்த்திகேயன் (தமிழில் ஆறுமுகன்) என்று அழைக்கப் பட்டான். (ஆரம்பத்தில் ஏழு தலைகள் இருந்தன என்றும் சொல்லப் படுகின்றது.)

இந்துக்களுக்கு மேற்குறிப்பிட்ட புராணக் கதை நன்கு தெரிந்திருந்த போதிலும், அதற்குப் பின்னால் உள்ள வான சாஸ்திர அறிவியலை அறிந்து கொண்டவர்கள் மிகச் சிலர் தான். விண்வெளியில் இருக்கும் ஏழு கார்த்திகை நட்சத்திரங்கள் தான், அந்த ஏழு கன்னிகைகளும். நமது பூமி உள்ள பால்வெளியில் அந்த நட்சத்திரங்களும் உள்ளன. (ஏழு பின்னர் ஆறாகி உள்ளது. அதற்கும் ஒரு காரணக் கதை இருக்கிறது.)

சரவணப் பொய்கை என்பது அண்டவெளியில் உள்ள பால் வெளியை குறிக்கும். ஆறு கார்த்திகை நட்சத்திரங்கள், புராணக் கதையில் முருகனின் ஆறு முகங்களாக உருவகிக்கப் பட்டது. உண்மையில் இது மதம் சம்பந்தமான விடயம் அல்ல. ஆதி கால மனிதர்களின் வான சாஸ்திர அறிவியல், இப்படியான கதைகள் மூலமாகத் தான் பரப்பப் பட்டு வந்துள்ளது. யேசிடி மதத்தவர்கள், இதே மாதிரியான கதையை ஏழு வர்ணங்களாக உருவகித்து உள்ளனர். ஆனால், இரண்டுக்கும் இடையிலான அறிவியல் அடிப்படை ஒன்று தான்.

தென்னிந்திய முருகன் வழிபாட்டில் காணப்படும் சேவல், மயிலில் காலின் கீழ் மிதிபடும் பாம்பு ஆகியன, யேசிடி மதத்தவராலும் புனித சின்னங்களாக கருதப் படுகின்றன. இவற்றை நேரில் கண்டறிய விரும்புவோர், வட ஈராக்கில் உள்ள லாலிஷ் எனும் இடத்தில் உள்ள யேசிடி மதத்தவரின் கோயிலுக்கு சென்று பார்க்கலாம். அல்கைதா, ISIS போன்ற முஸ்லிம் மதவெறி இயக்கங்கள், அந்தக் கோயிலை தகர்ப்பதற்கு பல தடவைகள் முயற்சித்துள்ளன.

“முருகன் வழிபாடு, தமிழர்களுக்கு மட்டும் தனித்துவமானது!” என்ற ஒரு பிழையான கட்டுக்கதை தமிழர்கள் மத்தியில் உள்ளது. அநேகமாக, குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழினவாதிகளே இது போன்ற கட்டுக் கதைகளை பரப்பி வந்துள்ளனர். முருகன் வழிபாடு, தென்னிந்தியாவில் உள்ள பிற திராவிட இனங்கள் மற்றும் இலங்கையில் சிங்களவர்கள் மத்தியிலும் காலங்காலமாக இருந்து வந்துள்ளது. அநேகமாக, முருகன் வழிபாடு ஆரிய மயமாக்கலுக்கு முந்திய திராவிட இனங்களின் வழிபாடாக இருந்திருக்கலாம்.

ஒரு காலத்தில், இந்தியா முதல், அரேபியா வரையில், முருகன் வழிபாடு இருந்திருக்க வேண்டும். சில அரேபியர்கள் இஸ்லாமியராக மாறிய பின்னரும், முருகனை வழிபட்டு வந்திருக்கிறார்கள். அரபு இஸ்லாமியர் மத்தியில் “அல் கதிர்” என்று அழைக்கப்படும் தெய்வம், முருகனை நினைவுபடுத்துகின்றது. முருகனுக்கு “கதிர் (காமன்)” என்ற இன்னொரு பெயர் இருப்பதை, நான் இங்கே சொல்லத் தேவையில்லை. இலங்கையில் உள்ள கதிர்காமத்தில் இஸ்லாமியர் வழிபாடு நடத்தும் பகுதி ஒன்று இன்றைக்கும் உள்ளது.

யேசிடி மதத்தவரின் கோயில் பூசாரிகளை "பிர்" என்று அழைப்பார்கள். கதிர்காமத்தில் பூசை செய்பவர்களும் பிராமணர்கள் அல்லர். அதற்கென்று தனியான பூசாரிகள் உள்ளனர். அவர்கள் பூசை வழிபாடு நடத்தும் முறை, பிற இந்துக் கோயில்களில் இருந்து மாறுபட்டது. யேசிடி மதத்தில் உள்ள, பக்திப் பாடல்களை  "கவ்வல்" என்று அழைப்பார்கள். அவற்றைப் பாடுவோர் "கவ்வாலிகள்" ஆவர். 

இன்றைய பாகிஸ்தானில், கர்நாடக சங்கீதம் போன்று, கவ்வாலி இசை மரபு இருந்து வருகின்றது. தமிழில் "காவாலி" என்ற சொல் புழக்கத்தில் உள்ளது. ஆனால், அது வேண்டுமென்றே எதிர்மறையான அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகின்றது. இந்து மத மேலாதிக்கவாதிகள், தமிழர்களின் மரபு வழி மத நம்பிக்கைகளை அழிப்பதற்காக, வேண்டுமென்றே அப்படியான தவறான கருத்துக்களை பரப்பி வந்தனர். 

ஈராக்கில் வாழும் யேசிடி குர்தியர்கள் திராவிடர்கள் அல்ல, ஆரியர்கள். அவர்களுக்கும் முஸ்லிம் குர்தியர்களுக்கும் இடையில், உருவத் தோற்றத்தில் எந்த வேறுபாடும் இல்லை. குர்து மொழியானது, பார்சி, சமஸ்கிருதம் போன்ற இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்கு நெருக்கமானது. குர்து மக்களில் பெரும்பான்மையானோர் சன்னி முஸ்லிம்கள். ஆயினும், மிகக் குறைந்த அளவில், யூத மதத்தை பின்பற்றுவோரும், ஷியா முஸ்லிம்களும், குர்து மக்கள் மத்தியில் இன்றைக்கும் வாழ்கின்றனர். யேசிடி மதத்தை சேர்ந்த மூன்று இலட்சம் குர்தியர்கள், ஒரு புராதன கால மதத்தை பின்பற்றுவதால், பல்வேறு பக்கங்களாலும் நெருக்குதலுக்கு உள்ளானார்கள்.

அரேபியர்கள் எல்லோரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் அல்லர். பண்டைய காலத்தில், அரேபியர் என்றால், அரபு மொழி பேசுவோர் என்று அர்த்தம். இனம் பற்றிய கற்பிதங்கள் இருபதாம் நூற்றாண்டில் தான் தோன்றின. ஈராக்கில் வாழும் அரேபியர்களில் பெரும்பான்மையானோர், அரபு மொழியை பேசியதால் அரேபியர் ஆனவர்கள். அவர்களின் பூர்வீகம் கிரேக்கமாக கூட இருக்கலாம். அலெக்சாண்டரின் படையெடுப்புகளுக்கு பின்னர் ஏராளமான கிரேக்கர்கள் அங்கே குடியேற்றப் பட்டனர். 

அலெக்சாண்டரின் காலத்திலேயே,  ஈராக்கில் இருந்த பாபிலோனிய கலாச்சாரம் அழிந்து விட்டது. கூடவே பாபிலோனியரின் மத நம்பிக்கைகளும் காணாமல் போய் விட்டன. ஆயினும், வெளியுலக தொடர்பற்ற வட ஈராக்கிய மலைப் பிரதேசத்தில், அது ஏதோ ஒரு வகையில் தொடர்ந்தும் பேணப் பட்டு வந்திருக்கலாம். யேசிடிகள் அந்தத் தொடர்ச்சியை பேணி வருபவர்களாக இருக்கலாம்.

யேசிடிக்கள் ஒரு புராதன கால மதத்தை பின்பற்றினாலும், அது காலப் போக்கில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. அது பிற மதங்களுடன் சமரசம் செய்து கொண்டு (syncretic), தன்னைத் தானே மறு வார்ப்புச் செய்து கொண்டுள்ளது. ஆதிகால பாரசீக மதமான, சரதூசரின் மதத்தின் சில கூறுகளை கொண்டுள்ளது. அதே நேரம், பிற்காலத்தில் வந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய மதக் கூறுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, கிறிஸ்தவர்கள் போன்று ஞானஸ்நானம் எடுப்பது, இஸ்லாமியர்கள் போன்று ஐந்து வேளை தொழுவது.

உண்மையில் “யேசிடி” என்பது அந்த மதத்தின் பெயர் அல்ல. அது, பிற்காலத்தில் ஏற்பட்ட காரணப் பெயர் ஆகும். அந்த மதத்தின் உண்மையான பெயர் என்னவென்பது யாருக்கும் தெரியாது. அதைப் பின்பற்றும் மக்களுக்கும் தெரியாது. கி.பி. 680 - 683 காலத்தில், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட கலீபா "யாசிட்" இன் பெயரால் அவ்வாறு அழைக்கப் படுகின்றனர். ஒருவேளை அந்தக் கால கட்டத்தில், மேற்கத்திய நாடுகளில் இருபதைப் போன்று, ஜனநாயக சமுதாயம் இருந்திருக்கும். பல கல்வியாளர்கள் மத்தியில், அழிந்து போன புராதன மதங்களை ஆராயும் ஆர்வம் தோன்றியிருக்க வேண்டும். யாசிட் கலீபா அப்படியான அறிஞர்களை ஆதரித்திருக்கலாம்.

அந்தக் காலகட்டத்திற்கு பின்னர் தான், யேசிடி ஒரு மத நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது. அதற்கு முன்னர் நமது நாட்டில் உள்ள சிறு தெய்வ வழிபாடு போன்று இருந்து வந்துள்ளது. இன்றைய லெபனானில் பிறந்த "அடி பின் முஸாபர்" (Adi bin Musafar) பாக்தாத் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியக் கல்வி கற்பதற்காக வந்திருந்தார். அங்கே தான் யேசிடி மதம் பற்றி அறிந்து கொண்டார். அதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக, வட ஈராக்கில் உள்ள ஹக்கரி மலைகளுக்கு சென்றார். நமது காலத்தில் அப்படியானவர்களை Anthropologist என்று அழைப்பார்கள்.

ஹக்கரி மலைகளில் வாழ்ந்த குர்து மொழி பேசும் மக்கள் மிகவும் பின்தங்கி இருந்தனர். அதனால், முஸாபர் அவர்களுக்கு ஒரு மீட்பர் போன்று தென்பட்டார். முஸாபர் அந்த மக்களுடன் தங்கியிருந்து, அவர்களின் நல் வாழ்வுக்காக பாடுபட்டார். அந்த மக்களை நிறுவன மயப் படுத்தினார். அவரின் விசுவாசிகள் அடவைஜா குழு என்று அறியப் பட்டனர். முஸாபர் இறந்த பின்னரும், மொசுல் நகருக்கு அருகில் இருந்த அவரது சமாதி, புனித யாத்திரை செல்லும் ஸ்தலமாகியது. பதினான்காம் நூற்றாண்டில், இஸ்லாமிய தூய்மைவாதிகள் அந்த சமாதியை உடைத்து விட்டனர்.

இஸ்லாமிய ஈராக்கில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும், யூதர்களும், புனித நூலின் மக்களாக கருதப் பட்டனர். அதனால் அவர்கள் மேல் ஒடுக்குமுறை பிரயோகிக்கப் படவில்லை. ஆனால், யேசிடி மக்கள் “பிசாசை வழிபடுபவர்கள்” என்று தவறாக கணிக்கப் பட்டார்கள். அதிகார வர்க்கம் ஒடுக்குமுறைகளை பிரயோகித்த பொழுது, அவர்களை சுற்றி இருந்த எந்த மதத்தை சேர்ந்த மக்களும் உதவ முன் வரவில்லை. இன்று வரைக்கும் அது தான் நிலைமை. 

19 ம் நூற்றாண்டில் இருந்த துருக்கி ஆட்சியாளர்களும், குர்து முஸ்லிம் நிலப்பிரபுக்களும் கூட, யேசிடி மக்களை புறக்கணித்து ஒதுக்கி வந்துள்ளனர். சதாம் ஹுசைன் காலத்தில், அபிவிருத்தி என்ற பெயரில் யேசிடி மக்கள் குறிப்பிட்ட சில கிராமங்களில் மீளக் குடியேற்றப் பட்டனர். அதன் விளைவாக, யேசிடிகள் குறிப்பிட சில பிரதேசங்களில் நெருக்கமாக வாழும் சமூகமானார்கள். அவர்களின் பிரதேசங்களை சுற்றிலும் அரேபியர்கள் வாழ்ந்தனர். இது அரசினால் திட்டமிடப் பட்ட, ஒரு வகையான சமூக கண்காணிப்பு எனலாம்.

2003 ம் ஆண்டு, ஈராக்கை அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்த நேரம், அடக்கப்பட்ட சிறுபான்மை இனமான யேசிடி குர்தியர்கள் அவர்களை மகிழ்வுடன் வரவேற்றனர். சதாம் காலத்தில் அதிகார வர்க்கமாக இருந்த சன்னி அரேபியர்கள் அமெரிக்கப் படையினரின் கடுமையான அடக்குமுறைக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டம், அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த அரேபியருக்கும், யேசிடிகளுக்கும் இடையில் ஒரு பிளவை உண்டு பண்ணியது. அன்று அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராகப் போராடிய அல்கைதா பாணி இயக்கங்கள், யேசிடிகள் மீது இடைக்கிடையே வன்முறை பிரயோகித்து வந்தன.

அண்மைக் காலத்தில், ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ISIS இயக்கம், சன்னி - இஸ்லாமிய மதவாத இயக்கம் ஆகும். அதனால், ஈராக்கின் சன்னி முஸ்லிம் மக்களும் அவர்களை ஆதரிக்கத் தொடங்கினார்கள். அண்மையில், சின்ஜார் பகுதியில் இடம்பெற்ற யேசிடி இனச் சுத்திகரிப்பின் போது, ISIS இயக்கத்திற்கு உள்ளூர் சன்னி முஸ்லிம் அரேபியரின் ஆதரவு கிடைத்தது. தம்மோடு ஒன்றாகப் படித்தவர்கள், ஒன்றாக வேலை செய்தவர்கள், அயலவர்கள் காட்டிக் கொடுத்ததாக, அகதிகளாக வெளியேறிய யேசிடி மக்கள் கூறுகின்றனர். 

யேசிடி மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், தமது மத நம்பிக்கையை வெளியே காட்டிக் கொள்வதில்லை. மதச் சின்னங்களை அணிவதில்லை. அரேபியர் போன்று நடந்து கொள்கின்றனர். அவர்கள் சரளமாக அரபு மொழி பேசினாலும், உச்சரிப்பு காட்டிக் கொடுத்து விடும். ஏனெனில், யேசிடிகளின் தாய் மொழி குர்து ஆகும்.

ISIS ஒரு பாசிஸ இயக்கம் என்பது ஏற்கனவே தெரிந்தது தான். அவர்களது “இஸ்லாமியத் தாயகத்தில்” சன்னி முஸ்லிம்களுக்கு மட்டுமே “பிரஜாவுரிமை” கிடைக்கும். ஷியா முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் மதம் மாற வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் படுகின்றனர். யேசிடிகளுக்கு அந்த சலுகை கிடையாது. ஏனென்றால், அவர்கள் “பிசாசை வழிபடுபவர்கள். அதனால், அழிக்கப் பட வேண்டியவர்கள்.” என்பது ISIS முன்வைக்கும் வாதம்.

துரதிர்ஷ்டவசமாக, இஸ்லாமியராகவும், கிறிஸ்தவராகவும் உள்ள பிற அரேபியர்களும் அந்தக் கருத்தை மௌனமாக வழி மொழிகின்றனர். ஈராக்கில் யேசிடிகளுக்கு எதிரான இனப்படுகொலையும், இனச் சுத்திகரிப்பும் மிகவும் கொடூரமாக நடந்துள்ளன. அதற்கு, உள்ளூர் மக்களின் மௌனமான அங்கீகாரமும் ஒரு காரணம். சில இடங்களில், சாதாரண அரபி மக்களே, இனச் சுத்திகரிப்புக்கு துணை போயுள்ளனர்.

வசதியான யேசிடி மக்கள் பிரிவினர், துருக்கி சென்று அங்கிருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோருகின்றனர். ஜெர்மனியில் மிகப் பெரும் எண்ணிக்கையில், புலம்பெயர்ந்த யேசிடி மக்கள் வாழ்கின்றனர். தற்போது எழும் மிகப்பெரிய கேள்வி என்னவெனில், புலம்பெயர்ந்த நாடுகளில் யேசிடி மதம் வளர முடியுமா? குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் மத நம்பிக்கை குறைந்து வருகின்றது. அவர்கள் நாகரிகம் என்ற பெயரில் பழைய சடங்குகளை புறக்கணித்து வருகின்றனர். 

யேசிடி மதத்திற்கு எழுதப் பட்ட புனித நூல் எதுவும் இல்லை. அவர்களது புராணக் கதைகளும், மறை நூல்களும், பரம்பரை பரம்பரையாக மனனம் செய்யப் பட்டு வந்துள்ளன. நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்திற்குட்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள், கோயில் திருவிழாக்கள் என்பன, யேசிடி மக்களை ஒரு சமூகமாக சேர்ந்திருக்க வைத்தது. நேற்று வரையில், ஈராக்கில் அது சாத்தியமானது. யேசிடி மதம் அழிந்து போகாமல், தொடர்ந்தும் நிலைத்திருக்குமா என்பது ஒரு கேள்விக்குறி தான்.


யேசிடி மக்கள் பற்றிய முன்னைய பதிவுகள்:

    


More Recent Articles


Click here to safely unsubscribe from "கலையகம்." Click here to view mailing archives, here to change your preferences, or here to subscribePrivacy