Your email updates, powered by FeedBlitz

 
Here is a sample subscription for you. Click here to start your FREE subscription

"தமிழ் ஓவியா" - 5 new articles

  1. துக்ளக் மூச்சு விட்டதுண்டா? கல்கி கண்டு கொண்டதுண்டா? தினமணி தீண்டியதுண்டா?
  2. கடவுள் - அறிஞர்களே ஆராய்ந்து பாருங்கள்!
  3. மகமதிய - கிறிஸ்தவ - இந்து கடவுள்கள் சக்தி எப்படிப்பட்டது?
  4. தமிழ்நாடே பெரியார் நினைவு சமத்துவபுரமாக ஒளிவிடவேண்டும்
  5. கர்மபலன் என்பதுதானே இந்துத்துவாவாதிகளின் சித்தாந்தம்!
  6. More Recent Articles
  7. Search தமிழ் ஓவியா

துக்ளக் மூச்சு விட்டதுண்டா? கல்கி கண்டு கொண்டதுண்டா? தினமணி தீண்டியதுண்டா?

ஜெயேந்திரர் முதல் தேவநாதன் வரை

காஞ்சிபுரம் மூக்கைத் துளைக்கிறது; கசுமாலம் இப்படியும் ஒரு பக்தியா? ஜென்மங்களா? என்று நாக்கைப் பிடுங்க நாலு கேள்விகளைப் பெண்கள் நடு வீதியில் கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.

மச்சேஸ்வரர் கோயிலாம் - அந்தக் கோயில் அர்ச்சகன் தேவநாதனாம் - கோயில் கருவறையிலே கரு உற்பத்தி பண்ணிக்கொண்டு கிடக்கிறானாம்.

பகவான் கர்ப்பக் கிரகத்தில் சரசமாடினால் முதுமை வந்து முட்டாதாம்- என்றும் இளமையில் சுகிக்கலாமாம்! அர்ச்சகன் தேவநாதனின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி பாவையர் பலர் அவன் மடியில் வீழ்ந்தனராம்.

ஒரு பக்கம் அர்ச்சனைத் தட்டில் காசு விழுமாம். இன்னொரு பக்கம் கர்ப்பக்கிரகத்தில் காமச் சேட்டை பூஜைகள் நடக்குமாம்.

எவ்வளவு கொழுப்பும், வக்கிரமும் இருந்தால் இந்தக் கேவலத்தை கை தொலைபேசி மூலம் படம் பிடித்து வைத்து, பிறகு தனியே போட்டுப் பார்த்து ரசிப்பானாம்.

ஒரு பெண், இரு பெண் அல்ல; 15 பெண்கள் வரை பட்டியல் நீள்கிறது. விஷயம் வெளியுலகுக்கு வரவே, ஆசாமிதன் குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டான்! இப்பொழுது நீதிமன்றத்தில் சரண் அடைந்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.

காமகோடி பீடாதிபதியே இந்தத் தரத்தில் உள்ளவர் என்கிறபோது இந்தத் தேவநாதன்தான் எம்மாத்திரம்!

காஞ்சி சங்கரமடத்தில் நடக்காதவைகளா இந்தக் கோயிலில் நடந்து விட்டது?

காமத்தையறுத்த மடாதிபதியே காமக் குளத்தில் விழுந்து நீச்சல் அடிக்கிறார் என்றால், அவாள் சிஷ்யாள் அவாள் வயதுக்கு எவ்வளவு ஆட்டம் போடுவா?

ஒவ்வொரு நாளும் பிரம்மமுகூர்த்த நேரத்தில் விடியற்காலை நாலரை மணிக்கு திருவரங்கத்திலிருந்து உஷா என்ற பெண் ஜெயேந்திரரோடு சல்லாப மொழிகளில் உல்லாசப் பேச்சுகளைப் கைப்பேசியில் பேசுவார் என்ற தகவல் எல்லாம் ஊர் சிரிக்கவில்லையா? அனுராதா ரமணன் என்ற பிரபல பார்ப்பனப் பெண் எழுத்தாளர், சங்கராச்சாரி வேங்கையிடமிருந்து எப்படி தப்பித்தார் என்பதை கண்ணீரும் கம்பலையுமாக தொலைக்காட்சிகளில் குமுறினாரே கொட்டியழுது வேதனையின் சூட்டைத் தணித்துக் கொள்ளவில்லையா? மைதிலி என்ற பெண்ணுடன் தன் எதிரிலேயே அந்த மடாதிபதி உறவு வைத்தார் என்று ஊருக்கும் உலகுக்கும் அறிவித்தாரே அதைப் பார்க்கும்போது இந்த தேவநாதன் விஷயம் அற்பமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

வடக்கே குஜராத் மாநிலம் தபோயில் உள்ள சவுமியநாராயண் கோயிலில் என்ன நடந்தது?

அர்ச்சகர்ப் பார்ப்பனர்களான சந்த், தேவ்வல்லப் கோயிலுக்குள் உள்ள குடிலிலேயே கூத்தும் குடியுமாகக் கும்மாளம் போட்ட காட்சிகள் எல்லாம் வீடியோ கோப்புகளாக வெளியில் வந்த,, காரித் துப்பினார்களே!

சபரி மலைக் கோயிலின் மூத்த தந்திரியான மோகனரு விபச்சாரிகளின் வீட்டில் கையும் களவுமாகப் பிடிபட வில்லையா?

இவையெல்லாம் இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில் சர்வ சாதாரணமாயிற்றே!

ஓம் என்பதற்கு அவர்கள் கூறும் தத்துவம் என்ன? ஆண் - பெண் சேர்க்கையின் வடிவம் என்றுதானே விளக்கம் சொல்லுகிறார்கள்?

பெண்கள் நெற்றியில் திலகமிட்டால், அது வீட்டு விலக்கான பெண்ணின் குருதியின் அடையாளம் என்று தானே கூசாமல் சொல்லுகிறார்கள். நாமம் தரிக்கிறீர்களே, அது என்ன என்று கேட்டால் அதற்கும் ஒரு தத்துவத்தைத் தயாராகவே வைத்துள்ளனரே!

வெள்ளைக் கோடுகள் இரண்டும், விஷ்ணுவின் தொடைகள் என்றும், நடுவில் உள்ள சிவப்புக் கோடு விஷ்ணுவின் ஆண் குறி என்றும்... அடேயப்பா, எவ்வளவு அட்சரப்பிசகு இல்லாமல் சொல்லுகிறார்கள்.

இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் மும்மூர்த்திகளும் சரி, அவர்களின் சீடகோடிகளும் சரி, தேவாதி தேவர்களும் சரி கற்பழிப்புக் குற்றம் செய்யாத ஒரே ஒரு கடைக்குட்டி சாமியைக் காட்ட முடியுமா?

காஞ்சிபுரம் தேவநாதன் இப்படியென்றால் அந்தத் தேவநாதனாகிய இந்திரன் கவுதமமுனிவரின் மனைவி அகலிகையை மாறுவேடம் பூண்டு கற்பழிக்கவில்லையா! சரசுவதியையே பெண்டாண்டவன் தானே படைத்தல் கடவுளான பிரம்மா.

தாருகாவனத்தில் இருந்த ரிஷிப் பத்தினிகளின் கற்பைச் சூறையாடி தன் சிசுனத்தை இழந்தவன் தான் முழுமுதற் கடவுளான சிவன். மகாவிஷ்ணுவைப்பற்றி கேட்கவும் வேண்டுமா? அதற்கென்றே ஒரு அவதாரமே எடுத்து (கிருஷ்ணாவதாரம்) காம வேட்டை யாடியவன் ஆயிற்றே!

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு மோட்சம் அளித்த மாபாதகம் தீர்த்த புராணங்கள் இந்துமதத்தைத் தவிர வேறு எங்குண்டு?

கோயில்களைப் பாருங்கள் அங்கு கொக்கோகக் காட்சிகள்; தேர்களைப் பாருங்கள் தேவர்களின் லீலா வினோத காட்சிகள்; இந்து மதத்தின் எந்தப்பரப்பை நோக்கினாலும் இத்தியாதி, இத்தியாதி காம சேட்டைகளின் களேபரக் காட்சிகள்தாம்.

அதற்காக வெட்கப்படுவதில்லை; இன்னும் சொல்லப் போனால் அந்தராத்மாவும் பரமாத்வாவும் ஆலிங்கனம் செய்கின்றன என்று அதற்குத் தத்துவ வார்த்தைகள் எல்லாம் தடபுடலாகவே உண்டு.

சாஸ்திர ரீதியாகவே அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளனர்.

வேஸ்யாதர்சனம் புண்யம்

ஸ்பர்சிவனம் பாபநாஸம்

சம்பனம் சர்வ தீர்த்தானாம்

மைதுனம் மோக்ஷ சாதனம்

பொருளும் வேண்டுமா?

வேசிகளைப் பார்ப்பதே புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவங்கள் நாசமாகும்; முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்குச் சமம்; உடலுறவு கொள்வது மோட்சத்தை அடையும் வழி என்று மோட்சத்திற்குக் குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்து வைத்துள்ளது இந்தக் குள்ளநரிக் கூட்டம்.

இந்தப் பார்ப்பனர்களின் யோக்கியதையை அவாளின் செல்லப் பிள்ளையான கம்பனே கூறி வைத்திருக்கிறான்.

இராமன் வனவாசம் சென்றபோது உயிர்கள் எல்லாம் அழுதன; மரங்கள் கருகின. ஆனால் பார்ப்பனர்கள் ராமனிடம் தங்களுக்கு இளம் பசுவும் கன்றும் தேவை என்று கேட்டுப் பெறுகின்றனர். ராமன் வனவாசம் முடிந்து நாடு திரும்பும்போது வாடிய பயிர்கள் துளிர்த்தன, உயிர்கள் மகிழ்ந்தன. மக்கள் கூடினார்கள். அப்பொழுது விலைமகள் வீடுகளில் இருந்த பார்ப்பனர்கள் வேசியர்களின் புடவையைக் கட்டிக் கொண்டும், வேசியர்கள் வேட்டிகளை கட்டிக் கொண்டும் வெளியில் வந்தனர் என்கிறான் கம்பன்.

வேசியர் உடுத்த கூறை வேதியர் சுற்ற வெற்றிப் பாசிழை மகளிர் ஆடை யந்தணர் பறித்துச் சுற்ற வாசம், மென் கலவைச் சாந்து என்று இனையன மயக்கந்தன்னால் பூசினர்க்கு இரட்டி ஆனார்

பூசலார் புகுந்துளோரும்

காளமேகப் புலவர் என்ற குடந்தை பார்ப்பான், தான் மோகம் கொண்ட தாசிப் பெண்ணுக்காக தான் வரித்துக் கொண்ட வைணவத்திலிருந்து விலகி சிவத்துக்கு தாண்டினான் என்பதெல்லாம் காமக் குரோதங்களுக்குமுன் கடவுளாவது கத்தரிக்காயாவது வேதங்களாவது வெண்டைக்காயாவது மதங்களாவது மண்ணாங் கட்டிகளாவது சர்வம் சரணம் காம சுகப்பவது.

ஒன்றைக் கவனிக்க வேண்டும்; காஞ்சிக் கோயில் தேவநாதன் அர்ச்சகப் பார்ப்பானின் சமாச்சாரம்பற்றி திருவாளர் துக்ளக் மூச்சு விட்டதுண்டா? கல்கி கண்டு கொண்டதுண்டா? தினமணி தீண்டியதுண்டா?

பக்தி போதைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய நேரமும், இடமும் இது!

இந்துக்கள் மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து சுவாசமிடும் நுரையீரல் எரிந்து விடும் என்று விவேகானந்தரிடம் கூறினாராம் மாக்ஸ்முல்லர், எந்த அர்த்தத்தில் கூறினாரோ தெரியவில்லை இதயத்துக்கும், மூளைக்கும் பாயும் ரத்தம் கெட்டுப் போய்விடும் என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.


---------------- மின்சாரம் அவர்கள் 21-11-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை


கடவுள் - அறிஞர்களே ஆராய்ந்து பாருங்கள்!


அறிஞர்களே ஆராய்ந்து பாருங்கள்

உலகத்தை எல்லாம் உண்டாக்கி, அதிலுள்ள எல்லாவற்றையும் நடத்தும் சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரால்தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு)கின்றது என்று சொல்லப்படுமானால், அவரை நடுநிலைமையுடையவனென்று சொல்லுவதைவிட பாரபட்சமுடையவரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரத்தியட்ச உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லுவதற்கே தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன. அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகிறது என்று சொல்லுவதைவிட அவரால் அதிகத் தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது. அவர் அறிவாளி என்று சொல்லுவதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜூ இருக்கின்றது. (அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக்கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன.

அவர் ஜீவன்களுக்கு நன்மையே செய்கிறாரென்பதைவிட தீமையே செய்கின்றார் என்பதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன. அவரால் நன்மை அடைந்தவர்களைவிட தீமையடைந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்லத் தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன. அவர் நாகரிகமுடையவர் என்று சொல்லுவதைவிட அவர் காட்டுமிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன. அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன.

அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட, அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கையை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.

அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள், சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும் தகுந்தபடி நடந்துகொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப்பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார்.

உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லையென்று கருதித் தினம் சவரம் செய்துகொள்ளுவதைப் பார்க்கின்றோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக்கொண்டே வருவதையும் பார்க்கின்றோம். இது என்ன, கடவுளுடன் மனிதன் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றாரா? அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?

-------------------------சித்திரபுத்திரன் எனும் புனை பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை -"குடி அரசு", 6.12.1947


மகமதிய - கிறிஸ்தவ - இந்து கடவுள்கள் சக்தி எப்படிப்பட்டது?


கடவுள் சக்தி விதண்டாவாதம்

நமது கடவுள்கள் சக்தி மிகவும் அதிசயமானதாகும். அதாவது, நமது கடவுள்கள் உலகில் மக்களை அக்கிரமங்கள் செய்யவொட்டாமல் தடுக்க முடியாதாம்.

ஆனால், மக்கள் சந்து பொந்துகளிலும், மூலை முடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமல் செய்த குற்றங்களையும், மனதினால் நினைத்த அக்கிரமங்களையும் பார்த்தும் ஒன்றுகூட விடாமல் பதிய வைத்தும், அதற்குத் தகுந்தபடி தீர்ப்புக்கூறி, தண்டனை கண்டனை கொடுக்கவும், அதற்காக நரகத்தில் ஆழ்த்தி வைக்கவும், மற்றும் பல ஜன்மங்கள் கொடுத்து, அவற்றில் கஷ்டப்படுத்தி வைக்கவும் முடியுமாம்.

நமது கடவுள்கள் சக்தி எவ்வளவு அதிசயமானது! அதிலும் மகமதியர்களுடைய கடவுளும், கிறிஸ்தவர்களுடைய கடவுளும் மனிதன் செத்த பிறகு, எல்லார் குற்றங் குறைகளையும் ஒன்றாய் பதிய வைத்திருந்து, ஏதோ அதற்கு இஷ்டப்பட்ட நாளில் அதாவது, ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லா மக்களையும் அவர்கள் புதைக்கப்பட்ட புதை குழியிலிருந்து எழுப்பிக் கணக்குப் பார்த்து ஒரே அடியாய் தீர்ப்புச் சொல்லி விடுமாம்.

இந்துக்களுடைய கடவுள்கள் அதாவது, சைவர்கள் கடவுள்களும், வைணவர்களுடைய கடவுள்களும், ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியாகவே அவ்வப்போது அவனைச் சுட்டு எரித்தபின் கண்களுக்குத் தெரியாத அவனுடைய ஆத்மாவைப் பிடித்து வைத்து, அதற்கு ஒரு சூட்சம சரீரமும் கொடுத்து, அந்த சரீரத்திற்கு அதற்குத் தக்க தண்டனை கொடுக்குமாம். அது பெரிதும் அடுத்த ஜென்மத்தில் இன்னின்ன ஜந்துவாய் பிறந்து, இன்னின்ன பலன் அனுபவிக்க வேண்டும் என்று கட்டளையிடுமாம்.

கிறிஸ்தவ சமயத்தில் உள்ள கடவுள் சக்திப்படி எல்லா மனிதனும் பாவம் செய்தேதான் தீருவானாம். அந்தப் பாவம் ஏசு கிறித்துமூலம்தான் மன்னிக்கப்படுமாம்.

மகம்மதிய மார்க்கப்படி மகம்மது நபிகள் மூலமாகத்தான் மன்னிக்கப்படுமாம். சைவ சமயப்படி சிவன் மூலமாகத்தான் மன்னிக்கப்படுமாம். அவருக்குத் தான் பரத்துவம் உண்டாம். வைணவ சமயப்படி விஷ்ணு மூலமாகத்தான் முடியுமாம். விஷ்ணுவுக்குத்தான் பரத்துவம் உண்டாம்.

ஆனால், சைவ, வைணவ சமயங்கள்படி மக்கள் பாவமே செய்வது மாத்திரமல்லாமல் புண்ணியமும் செய்யக் கூடுமாம். அதற்காக சொர்க்கம், வைகுண்டம், கைலாசம் என்கின்ற பதவிகள் உண்டாம். அப்புறம் ஒவ்வொரு மனிதனுக்கும், ஜன்மங்களும் உண்டாம். இந்த அபிப்பிராயங்கள் எவ்வளவு குழப்பமானதாய் இருந்தாலும், பார்ப்பானுக்கு அழுதால் மேற்கண்ட மோட்சங்களோ அல்லது நல்ல ஜன்மமோ எது வேண்டுமோ அது கிடைத்துவிடுமாம்.

ஆகவே, பொதுவாக கடவுள்களுடைய சக்திகள் அளவிட முடியாதது என்பதோடு, அறிந்துகொள்ள முடியாதது என்பது மாத்திரமல்லாமல், அதைப் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதோ சிந்திக்க முயற்சிப்பதோ மகாமகா பெரிய பெரிய பாவமாம். அதாவது, எந்தப் பாவத்தைச் செய்தாலும், எவ்வளவு பாவத்தைச் செய்தாலும், அவற்றுக்கெல்லாம் பிராயச்சித்தமும், மன்னிப்பும் உண்டாம். ஆனால், கடவுளைப்பற்றியோ, அவரது சக்தியைப் பற்றியோ ஏதாவது, எவனாவது சந்தேகப் பட்டுவிட்டானோ பிடித்தது மீளாத சனியன். அவனுக்கு மன்னிப்பே கிடையாது.

கிறிஸ்துநாதரைப் பிடித்தாலும் சரி, மகம்மது நபி பெருமானைப் பிடித்தாலும் சரி, அல்லது சிவன், விஷ்ணு, மகேசன் ஆகிய எவரைப் பிடித்தாலும் சரி, ஒரு நாளும் அந்தக் குற்றம் (எந்தக் குற்றம்? கடவுளை சந்தேகிக்கப்பட்ட குற்றம்) மன்னிக்கப்படவே மாட்டாது.

ஆனால், இந்த எல்லாக் கடவுள்களுக்கும் அவர்களால் அனுப்பப்பட்ட பெரியார்களுக்கும், அவருடைய அவதாரங்களுக்கும், கடவுளைப் பற்றியும், அவர்களுடைய சக்தியின் பெருமைகளைப் பற்றியும் மக்களை சந்தேகப்படாமல் இருக்கும்படிக்கோ, அல்லது அவநம்பிக்கைப்படாமல் இருக்கும்படிக்கோ செய்விக்க முடியாதாம். ஏனென்றால், அவ்வளவு நல்ல சாதுவான, சாந்தமான, கருணையுள்ள, சர்வ சக்தி பொருந்திய, சர்வியாபகமுள்ள கடவுள்களாம். பாவம், நாம் ஏன் அவற்றை தொந்தரவு செய்ய வேண்டும்? எல்லாம் கடவுள் செயல் என்று சும்மா இருந்துவிடுவோம்.

--------------------- தந்தைபெரியார் - "பகுத்தறிவு" 1.9.1935





தமிழ்நாடே பெரியார் நினைவு சமத்துவபுரமாக ஒளிவிடவேண்டும்


பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், குறிப்பாக மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்து நடத்திய சாதனைகளில் பெரியார் நினைவு சமத்துவபுரம் என்பது தனித்தன்மையானது.

தந்தை பெரியார் அவர்களுக்குப் புது புகழாரம் என்பதைவிட, தந்தை பெரியார் அவர்களின் கருத்துவழி ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் என்று இதனைக் கூறவேண்டும்.

1997 இல் தொடங்கப்பட்ட ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் நூறு வீடுகள்; அதில் 40 வீடுகள் தாழ்த்தப்பட்டோருக்கு, 25 வீடுகள் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, 25 வீடுகள் பிற்படுத்தப்பட்டோருக்கு, 10 வீடுகள் இதரப் பிரிவினர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது.

1997 முதல் 2001 வரை 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இடையில் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. ஆட்சி வந்தது. ஆட்சி மாறினாலும் நல்ல திட்டங்கள் நல்லபடி நடைபெறவேண்டும் என்கிற நல்லெண்ணம் இல்லாதவர், தனக்கே உரித்தான அணுகுமுறையோடு அத்திட்டத்தை முடக்கி வைத்தார்.

மீண்டும் கலைஞர் தலைமையிலான ஆட்சி, அத்திட்டத்தை விரிவாக்கிக் கொண்டு வருகிறது.

தந்தை பெரியார் 95 ஆண்டுகாலம் வாழ்ந்த அகவையைக் கணக்கிட்டு மேலும் 95 சமத்துவபுரங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டு இதுவரை 59 கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியவை 2011 ஆம் ஆண்டில் முடிக்கப்பட உள்ளன.

துணை முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை திறந்து வைத்து, தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளையும், நோக்கங்களையும் இடையறாது எடுத்துக் கூறி வருகிறார்.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே இதுபோன்ற ஒரு சிந்தனை _ திட்டம் என்பது தந்தை பெரியார் பிறந்த மண்ணில் முகிழ்த்தது பொருத்தமானதே! அதேநேரத்தில் ஆட்சியில் வந்தவர்களுக்கு அப்படியொரு சிந்தனை வரவேண்டுமே, தந்தை பெரியாரியலில் மாணவர் பருவந்தொட்டு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவர் முதல்வராக வந்த காரணத்தால் இது சாத்தியப்பட்டது என்பதுதான் உண்மை.

ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் ஒரு பக்கம்; ஜாதியின் காரணமாக உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து, கல்வி, வேலை வாய்ப்புகளில் அவர்களை உயர்த்துவது இன்னொரு பக்கம்.

மூன்றாவதாக அந்தச் சிந்தனைக்கு ஒரு வடிவம் கொடுத்து செயல்படுத்துவது என்பதாகும். அதுதான் மானமிகு கலைஞர் அவர்களின் மகத்தான இந்தப் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் ஆகும்.

தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் இது தொடங்கப்பட்டாலும், நியாயமாக வெளிமாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களில் இந்தத் திட்டம் அதிகம் தேவைப்படக் கூடியதாகும். ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட அங்கெல்லாம் தந்தை பெரியார் தேவைப்படுகிறார்.

இதில் இன்னொரு சிந்தனையும், கணிப்பும் தேவைப்படக்கூடியதாகும். எந்த நோக்கத்துக்காக இந்த சமத்துவபுரங்கள் தோற்றுவிக்கப்பட்டனவோ, அந்த நோக்கம் எந்த அளவுக்கு அங்கு நிறைவேறியுள்ளது, நிறைவேறி வருகிறது என்பதை கணிக்கவேண்டியதும் அவசியமாகும்.

ஜாதியற்ற நிலை, சமத்துவச் சிந்தனை, பகுத்தறிவு வளர்ச்சி, பெண் சமத்துவம் தொடர்பான சிந்தனைகள் மய்யம் அங்குள்ள நூலகத்தின் வழியாக ஊட்டப்படலாம்.

தமிழ்ப் புத்தாண்டாம் பொங்கல் விழாவை அங்கு மேலும் சிறப்பாகக் கொண்டாடி, சமத்துவபுரத்தின் நோக்கம் மேலும் மெருகேற்றப்படலாம். மிகச் சிறப்பாக செயல்படும் பெரியார் நினைவு சமத்துவபுரத்தினைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து ஊக்கப்படுத்தலாம்.

பெரும் பொருள் செலவு செய்து, இந்தியாவுக்கே வழிகாட்டியாகச் செயல்படுத்தும் ஒரு திட்டத்தின் நோக்கம் நிறைவேற்றப்படுவதில் நமது கவனமும், செயல்பாடும் இருக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.

அவ்வப்பொழுது கட்டடங்களை சரி செய்வது, தேவைகளை நிறைவு செய்வது, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, குறைகளைக் கேட்டறிந்து போக்குவது உள்ளிட்ட முறையில் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழ்நாடே பெரியார் நினைவு சமத்துவபுரமாக ஒளிவிடவேண்டும். அரசுடன் நாமும் நமது ஒத்துழைப்பை அளிப்போம்!


------------------நன்றி:-"விடுதலை" தலையங்கம் 20-11-2009


கர்மபலன் என்பதுதானே இந்துத்துவாவாதிகளின் சித்தாந்தம்!


கர்மயோக்

இந்தியாவில் மொத்த சொத்தில் நான்கில் ஒரு பங்கு 48 பணக்காரர்களிடம் உள்ளது. 80 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு ஈட்டும் வருமானம் ரூ.20. உலகில் உள்ள கோடீஸ்வரர்கள் முதல் 10 பேர்களில் நான்கு பேர் இந்தியாவில் உள்ளனர்.

இந்தியாவில் பெரிய வசதி படைத்த நிறுவனங்களிலிருந்து வரி பாக்கி ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்.

இந்தியாவில் உள்ள கறுப்புப் பணம் ரூ.75 லட்சம் கோடி.

இந்தியாவின் மொத்த கடனே ரூ.34 லட்சம் கோடிதான்.

உலகில் மனித வள வளர்ச்சியில் இந்தியாவுக்கு 127 ஆம் இடம்.

சுகாதாரமான நிலையில் குடிநீர் வசதியில்லாத கிராமங்கள் இந்தியாவில் 2.17 லட்சம்.

இந்தியாவில் சொந்த வீடுகள் அற்றவர்கள் 2 கோடியே 40 லட்சம்.

ஊழல் நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு உரிய இடம் 74.

வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழும் மக்களிடம்கூட இலஞ்சமாக வாங்கப்படும் தொகை ரூ.28,068 கோடியாம்.

ஊட்டச்சத்தின்றி அவதிப்படும் குழந்தைகள் 50 விழுக்காடாம்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வங்கிகளில் வைப்பு நிதி ரூ.1835 கோடியாம்.

இந்தியாவைப்பற்றிய வித்தியாசமான முரண்பாடான ஒரு புள்ளி விவரக் கொத்து இது.

இது எப்படியோ இருக்கட்டும். தலைகுனிய வேண்டிய ஒரு தகவல் இருக்கிறது.

இந்தியாவில் போதிய கழிப்பறை வசதியில்லாத மக்கள் 60 கோடி என்பதுதான் அந்தப் புள்ளி விவரம்.

வனாந்தனரமான இடங்களிலும், இரயில் தண்டவாளங்களின் வெளிப்பகுதிகளிலும் காலைக் கடன்களைக் கழிக்கின்றனர். பெண்களோ இரவுவரை காத்திருக்கவேண்டியுள்ளது.

ஒருமுறை ருசிய அதிபர் குருச்சேவ் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது இந்தக் காட்சியைப் பார்த்து தகவல் அறிந்து தம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

மூன்று வேளை சாப்பாடு இல்லாதவர்களுக்குக் கழிவறை ஏன் என்ற கேள்வியைக் கேட்காமல் இருந்தால் சரி.

இன்னொரு கொடுமை மலத்தை அள்ளும் மக்கள் 6.7 கோடியாகும். இது கர்மயோக் தெய்வத் திருப்பணி என்று கூறுகிற முதலமைச்சர் மோடிகளும் இருக்கிறார்களே!

கர்மபலன் என்பதுதானே இந்துத்துவாவாதிகளின் சித்தாந்தம்!

---------------------- மயிலாடன் அவர்கள் 20-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை


More Recent Articles



Click here to safely unsubscribe now from "தமிழ் ஓவியா" or change your subscription or subscribe